இரும்பு குவிமாடம், ஈரான் போர், கமலா ஹாரிஸ், கிம் ஜாங்: எலான் மஸ்க்- டிரம்ப் உரையாடலின் ஹைலைட்ஸ்
பில்லியனர் தொழிலதிபரும், X (முன்னர் ட்விட்டர்) உரிமையாளருமான எலான் மஸ்க் இன்று தனது சமூக ஊடக வலையமைப்பில் டொனால்ட் டிரம்பை நேர்காணல் செய்தார். இந்திய நேரப்படி காலை 5:30 மணிக்குத் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த இந்த நிகழ்வு, DDOS தாக்குதல் எனப்படும் ஒரு வகையான சைபர் தாக்குதலால் 40 நிமிடங்களுக்கு மேல் தாமதமானது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த உரையாடலின் போது, கடந்த மாதம் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி, கமலா ஹாரிஸ், அதிபர் பைடன், ஈரான் போர், வடகொரியா அதிபர் மற்றும் ரஷ்யாவின் வளர்ச்சி குறித்து இருவரும் நீண்ட நேரம் பேசினர். 2 1.3 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இந்த நேர்காணலில் இணைந்திருந்தனர்.
X இல் மஸ்க்-ட்ரம்ப் நேர்காணலின் சிறப்பம்சங்கள்
டொனால்ட் டிரம்ப், கொலை முயற்சியிலிருந்து தப்பியதை பற்றி பேசிய ட்ரம்ப்,"நான் இப்போது விசுவாசியாக இருக்கிறேன்" என்கிறார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த சம்பவத்திற்கு பின்னர் அவர்கள் கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறினார். டொனால்ட் டிரம்ப், கடந்த மாதம் பென்சில்வேனியாவில் நடந்த பேரணியின் போது சுடப்பட்ட தருணத்தை நினைவு கூர்ந்தார்.
போர் சூழல் மற்றும் உலக நாடுகள் தலைவர்கள் பற்றி டிரம்ப்
ரஷ்யா, சீனா மற்றும் வட கொரியா தலைவர்கள் தங்கள் விளையாட்டில் உச்சியில் இருப்பதாகவும், சமாளிக்க அமெரிக்காவிற்கு வலுவான ஜனாதிபதி தேவை என்றும் டொனால்ட் டிரம்ப் இன்று தெரிவித்தார். தான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமித்திருக்காது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேபோல ஈரான்-ஹமாஸ் போர் நடந்திருக்காது எனவும் தெரிவித்தார். தான் ஜனாதிபதியாக இருந்த போது, ஆயுதங்கள் மீது கட்டுப்பாடு விதித்திருந்தால் ஈரான்-இஸ்ரேல் போர் நடைபெற முடியாமல் போனது. இப்போது அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதாலேயே போர் சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.
கமலா ஹாரிஸ் அமெரிக்காவை "அழிப்பார்": டொனால்ட் டிரம்ப்
"எங்களுக்கு இப்போது ஜனாதிபதி இல்லை - மேலும் கமலா இன்னும் மோசமானவர். அவர் ஒரு சான் பிரான்சிஸ்கோ தாராளவாதி. அவர் அந்த நகரத்தை அழித்தார். கலிபோர்னியாவை அழித்தார், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் நம் நாட்டை அழித்துவிடுவார்" என்று டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார். அமெரிக்க பொருளாதாரம் தொடர்பாக ஜோ பைடனை டொனால்ட் டிரம்ப் கடுமையாக சாடினார். "பொருளாதாரம் பணவீக்கத்தால் ஒரு பேரழிவாக உள்ளது... நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் நிறைய பணத்தை சேமித்தனர். இன்று அவர்கள் தங்கள் பணத்தை முழுவதுமாக செலவழிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது மற்றும் பணத்தைக் கடன் வாங்குகிறார்கள்," என்று அவர் மஸ்க்கிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
"நாங்கள் இரும்புக்குவிமாடத்தை உருவாக்கப் போகிறோம்"
இஸ்ரேல் போல அமெரிக்காவிலும் ஒரு இரும்புக்குவி மாடம் உருவாக்க போவதாக டிரம்ப் தெரிவித்தார். "நாங்கள் ஒரு இரும்புக் குவிமாடத்தை உருவாக்கப் போகிறோம். இஸ்ரேலிடம் அது உள்ளது. உலகிலேயே மிகச் சிறந்த இரும்புக் குவிமாடத்தை நாங்கள் வைத்திருக்கப் போகிறோம். எங்களுக்கு இது தேவை. அதையெல்லாம் அமெரிக்காவில் உருவாக்கப் போகிறோம்" என்று எலான் மஸ்க்கிடம் டொனால்ட் டிரம்ப் கூறினார். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பற்றியும் டொனால்ட் டிரம்ப் பேசினார். "எங்களிடம் ஒரு குறைபாடுள்ள அரசாங்கம் உள்ளது... ஒரு மாதத்தில் மில்லியன் கணக்கான மக்கள் வருகிறார்கள், பின்னர் கமலா ஏதோ செய்யப் போவதாக நடிக்க முயற்சிக்கிறார். அவளுக்கு மூன்றரை ஆண்டுகள் இருந்தன, அவர்களுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் உள்ளன. ஆனால் அவர்கள் எதையும் செய்ய மாட்டார்கள்" என்று கூறினார்.