நேருக்கு நேர் சந்திக்கும் டிரம்ப் -ஜி ஜின்பிங் -புடின்: சீனாவில் நடக்கும் முத்தரப்பு உச்சி மாநாட்டின் பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
உலக அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகிய மூவரும் வரலாற்றில் முதன்முறையாக நேருக்கு நேர் சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். வரும் நவம்பர் 19-ஆம் தேதி சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டிற்கு இடையே இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இந்தச் சந்திப்பு "மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்புமுனை" எனச் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
நோக்கம்
முத்தரப்புச் சந்திப்பின் முக்கிய நோக்கம் என்ன?
பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய மாவோ நிங், உலகின் மூன்று வல்லரசுத் தலைவர்களின் சந்திப்பு குறித்து,"உலக அமைதியைப் பாதுகாப்பது மற்றும் வல்லரசு நாடுகளின் உறவுகளில் மூலோபாய ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவது குறித்து மூன்று தலைவர்களும் ஆழமாக கருத்துகளைப் பரிமாறிக்கொள்வார்கள்" எனக்கூறினார்.
சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பை வலுப்படுத்துவதும், கருத்து வேறுபாடுகளைக் களைந்து உறவுகளைச் சீராக்குவதும் மூன்று நாடுகளின் நலன்களுக்கும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் உகந்ததாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை
அணு ஆயுதக் குறைப்பு பேச்சுவார்த்தையில் டிரம்ப் தீவிரம்
இந்த முத்தரப்பு உச்சி மாநாட்டில் அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்த விவாதமே முதன்மை இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணு ஆயுதங்களின் பெருக்கம் மிகவும் ஆபத்தானது எனக் கருதும் அதிபர் டிரம்ப், உலகில் அணு ஆயுதங்களைக் குறைப்பது குறித்து இச்சந்திப்பில் தீவிரமாக வலியுறுத்துவார் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே அணு ஆயுதக் கையிருப்புக்கு வரம்பு விதித்திருந்த 'நியூ ஸ்டார்ட்' ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதத்துடன் காலாவதியானது. இதனை நீட்டிக்க ரஷ்யா விடுத்த கோரிக்கையை நிராகரித்த டிரம்ப், சீனாவையும் உள்ளடக்கிய "புதிய, மேம்படுத்தப்பட்ட மற்றும் நவீனமயமாக்கப்பட்ட" ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்.