இஸ்ரேல் ஹமாஸ் போரை தூண்டும் போலி செய்திகள்
இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடங்கியது முதலே, சமூக வலைதளங்களில் போலி செய்திகளும் பரவத் தொடங்கி விட்டன. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பின் திடீர் ஏவுகணை தாக்குதலால், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் மூண்டது. 15 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போரில், இரு தரப்பிலும் தற்போது வரை ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் ஹமாஸ் போரின் தாக்கம் அந்த பிராந்தியத்தில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இந்த போர் குறித்து பரப்பப்படும் போலிச் செய்திகளால் உணரப்படுகிறது. தவறாக சித்தரிக்கப்பட்ட மற்றும் புனையப்பட்ட உலக தலைவர்கள் வீடியோக்கள், பொதுமக்களின் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் தீயாக பரவி பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது.
சித்தரிக்கப்பட்ட ரஷ்ய அதிபரின் பேச்சு
கடந்த வாரம் ரஷ்ய அதிபர் புடின பேசியதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த காணொளியில், அவர் இஸ்ரேல்- ஹமாஸ் போரில், அமெரிக்கா தலையிடக்கூடாது என எச்சரித்து இருந்தார். போருக்கு நடுவில், ரஷ்ய அதிபர் கருத்திற்கு எதிர்வினைகள் வரத் தொடங்கிய போது, அது சித்தரிக்கப்பட்ட வீடியோ என தெரியவந்தது. கடந்த வருடம் உக்ரைன் போரின் போது, அவர் பேசிய வீடியோவை, இஸ்ரேல்-ஹமாஸ் போரின் போது பேசியதாக சித்தரிக்கப்பட்டு அந்த வீடியோ பரப்பப்பட்டது. இது மட்டுமன்றி காசாவில் நடைபெற்ற மருத்துவமனை தாக்குதலுக்கு, ஹமாஸ் தவறாக ஏவிய ஏவுகணையே காரணம் என, அல் ஜசீரா செய்தியாளர் பெயரில் போலி ட்விட்டர் கணக்கு மூலம் செய்தி பரப்பப்பட்டு வந்தது.
போர் வீடியோக்கள் என பரப்பப்படும் வீடியோ கேம் காட்சிகள்
பாலஸ்தீனியரால், இஸ்ரேல் இளம்பெண் துன்புறுத்தப்படுவது போன்ற போலி வீடியோவும், இஸ்ரேல் ராணுவத்தினர், பாலஸ்தீனரை உயிரோடு எரித்துக் கொல்வது போன்ற போலி வீடியோக்களும் வைரலானது. எகிப்து நாட்டில், விளையாட்டு அரங்கத்தில் பாராசூட்டில் இறங்கும் மக்களின் வீடியோக்களை பகிர்ந்து, இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினரின் வீடியோக்கள் என்றும் செய்திகள் பரப்பப்படுகின்றன. இதற்கெல்லாம் ஒரு படி மேலே போய், வீடியோ கேமில் இடம் பெற்றுள்ள காட்சிகளை, போர் காட்சிகள் எனவும் பரப்பப்பட்டு வருகின்றது.
போலி செய்திகளால் ஏற்படும் பிரச்சனைகள்
கடந்த ஒரு வாரத்திற்கு முன் பிரான்ஸ் நாட்டின் ஒரு பள்ளிக்கூடத்தில் புகுந்து, ஆசிரியரை, 20 வயது இஸ்லாமிய இளைஞர் கத்தியால் குத்திக்கொன்றார். கணிசமான இஸ்லாமியர்கள் மற்றும் யூத மக்கள் வாழும் பிரான்சில், இச்சம்பவம் இரு சமூகங்களுடைய மோதல் சூழலை உருவாக்கியது. அமெரிக்காவில், 6 வயது பாலஸ்தீன சிறுவன், அவன் தங்கி இருந்த வீட்டு உரிமையாளரால், 26 முறை குத்திக் கொள்ளப்பட்டார். அச்சிறுவன் கொல்லப்பட்டதற்கு, இஸ்லாமிய வெறுப்பும், இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலும் காரணம் என போலீசார் தெரிவித்தனர். இஸ்ரேல் பாலஸ்தீன போருக்கு பின், இங்கிலாந்தில் யூதர்களுக்கு எதிரான குற்றங்கள் 300 மடங்கு அதிகரித்துள்ளது, இது கடந்த வாரம் யூத பள்ளிகளை மூடும் அளவிற்கு இட்டுச்சென்றது குறிப்பிடத்தக்கது.
போலி செய்திகளுக்கு எதிரான போர்
சமூக வலைதளங்களில் அதிகரித்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடர்பான போலி செய்திகள் மீது, மெட்டா, டிக் டாக், யூடியூப் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வாரம் கண்டித்து இருந்தது. அமெரிக்காவும் போலி செய்திகளை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, சமூக வலைதள நிறுவனங்களிடம் கேள்வி எழுப்பியுள்ளது. போலி செய்திகளை கட்டுப்படுத்துவதில் சமூக வலைதளங்களுக்கு இருக்கும் அதே பொறுப்பு, சாமானியர்களான நமக்கும் இருக்கிறது. நாம் பார்ப்பது, நாம் பகிர்வது அனைத்தும், நம் எண்ணங்களை மாற்றக்கூடியது. உலகில் வேறு எந்த போரையும் விட, போலிச் செய்திகளுக்கு எதிரான போரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இப்போது உள்ளோம்.