ஏன் காஸா போர், இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் என அஞ்சப்படுகிறது?
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கியது முதல் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல் பாலஸ்தீன போரின் விளைவாக, அரபு நாடுகள் இஸ்ரேல் உடனான உறவுகள் இயல்பு நிலைக்கு திரும்புவதை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த "ஆபிரகாம் ஒப்பந்தங்கள்" முதல் வேகம் எடுத்த பேச்சுவார்த்தை, இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பின் தலைகீழாக மாறியது. இந்த போரின் விளைவாக, சவுதி அரேபியா முதல் நாடாக, பேச்சுவார்த்தையை இடை நிறுத்தியது. குறைந்தது 470க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த காஸா மருத்துவமனை தாக்குதலை, இஸ்ரேல் நடத்தவில்லை என அமெரிக்க அதிபர் கூறியிருந்தார். அதே சமயம், அரபு நாடுகளான எகிப்து, சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்டவை இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலை குற்றம் சாட்டியுள்ளன.
'தி நக்பா'- பேரழிவு
பாலஸ்தீனீர்கள் மற்றும் அரபு நாடுகள் இடையேயான போர், அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பின் திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பின், தொடங்கியது அல்ல. கடந்த 1948 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வரும் இப்போரில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் பல லட்சக்கணக்கானோர் அகதிகளாக வெளியேறி உள்ளனர். இதை பாலஸ்தீன மக்கள் 'நக்பா' அல்லது பேரழிவு என அழைக்கிறார்கள்.
1948 ஆம் ஆண்டு நடந்த பாலஸ்தீன போர்
1948 ஆண்டு நடைபெற்ற போர், அரபு நாடுகளுக்கும் புதிதாக சுதந்திரம் பெற்ற இஸ்ரேலுக்கும் இடையிலான முதல் மோதலாகும். மே 14, 1948 இல் இஸ்ரேல் தனது சுதந்திரத்தை அறிவித்தது. பாலஸ்தீனத்திற்கான ஐக்கிய நாடுகளின் பிரிவினை முன்மொழிவுக்குப் பிறகு, அதுவரை பாலஸ்தீனத்தில் உள்நாட்டு போராக இருந்தது, இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான போராக மாறியது. எகிப்து, ஈராக், ஜோர்டான், லெபனான் மற்றும் சிரியா ஆகிய 5 அரபு நாடுகளின் இராணுவக் கூட்டணி பாலஸ்தீனத்திற்குள் நுழைந்தது. அது பாலஸ்தீன மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களின் நிரந்தர இடம்பெயர்வுடன் முடிந்தது. பாலஸ்தீனத்துக்கென ஐநா முன்மொழிந்த கிட்டத்தட்ட 60% மேலான நிலப்பரப்பை, தற்போது இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்த இஸ்ரேல் அரபு நாடுகள் இடையேயான மோதல்
1949 ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும், இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளிடையே உறவு சுமூகமாக இல்லை. பின்னர் 1956 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூயஸ் நெருக்கடிக்கு பின் மீண்டும் மோசம் அடைந்தது. மே மாதம் 1967 ஆம் ஆண்டில், டிரான் ஜலசந்தியில் இஸ்ரேல் நாட்டு கப்பல்களுக்கு எகிப்து அனுமதி மறுத்தது. இதுவே ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் போர் மூல காரணமானது. ஆறு நாட்கள் நடந்த போரின் விளைவாக எகிப்து தன் வசம் இருந்த காஸா பகுதியையும், சினாய் தீபகற்பத்தையும் இஸ்ரேலிடம் இழந்தது. எகிப்துக்கு ஆதரவாக போர் புரிந்த ஜோடான், சிரியா ஆகிய நாடுகளும் தங்கள் நிலப்பரப்பை இஸ்ரேலிடம் இழந்தது குறிப்பிடத்தக்கது.
அரபு தேசியவாதம்
இஸ்ரேலுக்கு எதிரான தொடர் போரில், பாலஸ்தீனம் மட்டுமல்லாது, அரபு நாடுகளும் தங்களது நிலப்பரப்பை தொடர்ந்து இழந்து வந்தனர். இது அரபு மக்களின் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தியது. இதுவே அரபு தேசியவாதம் 1950 மற்றும் 60களில் உச்சம் தொடகாரணமானது. மேலும் இஸ்ரேல் உடனான சமாதான பேச்சுவார்த்தை அல்லது சுகந்திர பாலஸ்தீனம் குறித்து பேசிய பிரபலமானவர்கள் தொடர்ந்து கொள்ளப்பட்டு வந்தனர். ஜூலை மாதம் 20 ஆம் தேதி 1951 ஆம் ஆண்டு, ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் ஜோர்டானின் மன்னர் ஒன்றாம் அப்துல்லா, இஸ்ரேலுடன் சகிப்புத்தன்மையாக இருந்ததற்காக பாலஸ்தீனியரால் கொல்லப்பட்டார். எகிப்து மன்னர் அன்வர் சதாத், இஸ்ரேலின் அமைதி ஒப்பந்தத்தை ஆதரித்ததற்காக 1981 ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்.
அரபு நாடுகளை ஒன்றிணைக்கும் புனித ஸ்தலங்கள்
அரபு நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைய, மதம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித ஸ்தலமாக கருதப்படும் ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி உள்ளிட்ட பல இஸ்லாமிய புனித ஸ்தலங்கள் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் அரபு நாடுகள் இடையேயான உறவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த "ஆபிரகாம் ஒப்பந்தங்கள்" திருப்புணையாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில், இஸ்ரேல், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தம் அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை தனித்து இயல்பு நிலை திரும்ப முக்கிய காரணமாக விளங்கியது குறிப்பிடத்தக்கது.