ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன், வரும் மார்ச் 22-ஆம் தேதி துவங்குகிறது. இந்த போட்டி தொடருக்கான அட்டவணை நேற்று வெளியாகியுள்ளது. இதன்படி மார்ச் 22ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுடன் மோதவுள்ளது. இந்த போட்டி சென்னையில் நடைபெறும். அடுத்த போட்டி, பஞ்சாப் கிங்சிற்கும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியினருக்கும், மொஹாலியில் நடைபெறுகிறது. தொடரின் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே தற்போது வெளியாகியுள்ளது. அதாவது ஏப்ரல் 7 வரை நடைபெறவுள்ள போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியாகியுள்ளது. மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை விவரம் பொதுத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் முடிவு செய்யப்படும்.
இன்று தொடங்குகிறது மகளிருக்கான ஐபிஎல் போட்டி தொடர்
சென்ற ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மகளிர் ஐபிஎல் போட்டிகளின் இரண்டாவது சீசன் இன்று தொடங்கவுள்ளன. சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதவுள்ளன. முன்னதாக, கடத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள், மும்பையில் மட்டுமே நடைபெற்ற நிலையில், இந்தாண்டுக்கான போட்டிகள், மும்பை, டெல்லி மற்றும் பெங்களுருவில் நடைபெறும். மொத்தம் 22 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. தொடக்க நாள் தவிர தினசரி ஆட்டங்கள் இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.10 கோடி.
Ind vs Eng : 4வது போட்டி இன்று தொடக்கம்
இந்தியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கலந்துகொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இன்று தொடரின் 4 வது போட்டியை விளையாடவுள்ளது. ராஞ்சி மைதானத்தில் நடைபெறும் இந்த 4 வது போட்டியின் இறுதியில், இந்தியா வெற்றி பெற்றால், தொடரை கைப்பற்றி விடும். இந்த போட்டி, இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா அணியில், பும்ராவிற்கு ஓய்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பந்து வீச்சில் ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ் ஆகியோரை நம்பியே அணி செயல்படவேண்டியுள்ளது.
மும்பை பாந்த்ரா பகுதியில் ரூ.5.4 கோடிக்கு வீடு வாங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால்
இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், உழைப்பால் உயர்ந்தவர் என்ற பழமொழிக்கு ஏற்றார் போல, மும்பை பாந்த்ரா பகுதியில் ரூ.5.4 கோடிக்கு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். கிழக்கு பாந்த்ராவில், வசதியானவர்கள் வசிக்கும் அதானியின் எக்ஸ் பிகேசியில், 1,100 சதுர அடி அளவில், பிளாட் ஒன்றை வாங்கியுள்ளார் யஷஸ்வி. இந்த ஃப்ளாட் ஜனவரி 7 அன்று பதிவு செய்யப்பட்டது என்று செய்திகள் தெரிவிக்கிறது. சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்தை விட்டுவிட்டு, பிழைப்புக்காக மும்பை வந்து, மும்பையின் ஆசாத் மைதானம் அருகே டென்ட்டில் தங்கி வாழ்க்கை நடத்திய ஜெய்ஸ்வாலின் குடும்பம், வறுமை கோட்டிற்கு கீழே இருந்தவர்கள். ஜெய்ஸ்வாலும் தன்னுடைய கிரிக்கெட் கனவிற்காக, மைதானம் அருகே பானிபூரி விற்பவரிடம் வேலை பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.