
ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுடனான டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இதில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 4 வது டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணியில் இருந்து ஜஸ்ப்ரீத் பும்ரா விடுவிக்கப்பட்டுள்ளார்.
பும்ராவின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தசைப் பிடிப்பு காரணமாக இரண்டு மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய கே.எல்.ராகுல், நான்காவது போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்துள்ளது.
அதில் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று, தொடரில் முன்னிலை வகிக்கிறது.
ஐபிஎல்
மார்ச் 22 முதல் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டிகள் துவங்குகிறது
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ஆம் தேதி துவங்கும் என ஐபிஎல் சேர்மன் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் விதிமுறைகளின்படி கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் விளையாடிய அணிகளே இம்முறை தொடக்க ஆட்டத்தில் மோத வேண்டும்.
இதன்படி மார்ச் 22ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் விளையாடும் என கூறப்படுகிறது.
எனினும், போட்டிக்கான முழு அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.
தொடரின் முதல் 15 நாட்களுக்கான அட்டவணை மட்டுமே அறிவிக்கப்படும், மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை விவரம் பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என அருண் துமால் தெரிவித்தார்.
விராட் கோலி
விராட் கோலி - அனுஷ்கா ஷர்மாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது
கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா தம்பதியினர் சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், "மிகுந்த மகிழ்ச்சியாலும், அன்பினாலும் எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளன. கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்தச் செய்தியை உங்களுக்கு அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வாமிகாவின் குட்டித் தம்பிக்கு அகாய் (Akaay) என பெயரிட்டுள்ளோம். எங்கள் வாழ்வின் இந்த அழகான நேரத்தில் உங்கள் ஆசியையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறோம். இந்த நேரத்தில் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குதிரையேற்றம்
ஒலிம்பிக் குதிரையேற்றத்திற்கு இந்திய வீரர் அனுஷ் அகர்வாலா தகுதி
வரும் ஜூலை மாதம், பாரிஸில் தொடங்கவுள்ள ஒலிம்பிக் போட்டி தொடரில், குதிரையேற்றம் போட்டியில் (டிரஸ்சேஜ் பிரிவு) பங்கேற்க இந்திய வீரர் அனுஷ் அகர்வாலா தகுதி பெற்றுள்ளார் என சர்வதேச குதிரையேற்ற விளையாட்டு சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம், பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய குதிரையேற்ற வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
அதோடு, குதிரையேற்ற போட்டியில் கலந்துகொள்ளவுள்ள 8வது இந்தியர் இவர்.
கொல்கத்தாவை சேர்ந்த 24 வயதான அனுஷ், கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் குதிரையேற்ற பந்தயத்தில் தனிநபர் பிரிவில் (டிரஸ்சேஜ்) வெண்கலப்பதக்கத்தை வென்றார்.