Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் கீரன் பொல்லார்டு 2024 ஆம் ஆண்டு ஆடவர் டி20 உலகக்கோப்பைக்கான அணியின் உதவி பயிற்சியாளராக அணியில் இணைய உள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24) அறிவித்துள்ளது. டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த 36 வயதான முன்னாள் ஆல்ரவுண்டர் கீரன் பொல்லார்டு, போட்டியை இணைந்து நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவின் கள நிலைமைகள் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆலோசனை வழங்க உள்ளார். 2012இல் வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 உலகக் கோப்பையை வெல்ல பொல்லார்டு உதவினார் மற்றும் டி20 கிரிக்கெட்டில் 600க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளார்.
பேட்டில் அமைதி சின்னத்தை பயன்படுத்த கவாஜாவிற்கு ஐசிசி அனுமதி மறுப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உஸ்மான் கவாஜா தனது பேட் மற்றும் ஷூவில் அமைதி சின்னம் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மெல்போர்னில் போட்டிக்கு முன்பாக நடந்த ஒரு பயிற்சி அமர்வின்போது ஒரு கருப்பு புறாவை காட்டும் ஸ்டிக்கர் மற்றும் மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தின் கட்டுரை ஒன்றின் குறிப்பு அவரது பேட் மற்றும் ஷூவில் இருந்தது. இந்த வாரம் நடக்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போதும் அதை அணிந்து விளையாட கவாஜா சமீபத்திய நாட்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஐசிசியிடம் விவாதித்தபோது, அவர்கள் கவாஜாவின் கோரிக்கையை முழுமையாக நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது மத்திய அரசு
இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, மத்திய விளையாட்டு அமைச்சகம் அதன் அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்துமாறு அமைப்புக்கு உத்தரவிட்டது. மேலும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் விவகாரங்களை நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு தற்காலிக குழுவை உருவாக்க இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வானதற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் மீண்டும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், சில வீரர்கள் அரசு தங்களுக்கு வழங்கிய விருதுகளையும் திரும்ப அளித்து வருகின்றனர். இந்நிலையில், தேசிய அளவிலான மல்யுத்த போட்டியை முறையாக நடத்தவில்லை எனக் கூறி புதிய நிர்வாகிகள் கொண்ட அமைப்பை மத்திய அரசு இடைநீக்கம் செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையே மும்பை வான்கடே மைதானத்தில் டிசம்பர் 21 முதல் தொடங்கி நடந்து வந்த டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 219 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 261 ரன்களும் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடி 406 ரன்கள் குவித்தது. இதன் மூலம், போட்டியின் நான்காம் நாளில் 75 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மகளிர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா பெறும் முதல் வெற்றி இதுவாகும்.
ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தகுதிப் போட்டியை நடத்த தெலுங்கானா முயற்சி
இந்தியா vs ஆப்கானிஸ்தான் இடையேயான ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தகுதிப் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க உள்ளதாக தெலுங்கானா கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. இதற்காக, காச்சிபௌலியில் உள்ள ஜிஎம்சி பாலயோகி ஸ்டேடியத்தை தயார் செய்து வருகிறது. ஹைதராபாத்தில் நடக்கும் அனைத்து ஐஎஸ்எல் போட்டிகளும் இங்குதான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியை நடத்துவது மாநிலத்தில் கால்பந்தாட்டத்தை பெரிய அளவில் ஊக்குவிக்கும் என்று தெலுங்கானா கால்பந்து சங்கத்தின் தலைவர் மஹி மற்றும் செயலாளர் பல்குணா ஆகியோர் கூறியுள்ளனர். சமீபத்தில், தெலுங்கானா முதல்வராக பதவியேற்ற ரேவந்த் ரெட்டி ஒரு கால்பந்து வீரர் என்பதால், அரசிடமிருந்து இதற்கு போதிய ஆதரவு கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.