Sports RoundUp: ரோஹன் போபண்ணா ஜோடி அதிர்ச்சித் தோல்வி; இந்திய வீரர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வி; மேலும் பல முக்கிய செய்திகள்
சனிக்கிழமை (நவம்பர் 18) இத்தாலியின் டுரினில் நடந்த ஏடிபி பைனல்ஸ் ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் அரையிறுதியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ரோஹன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டன் ஜோடி தோற்றது. 80 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் போபண்ணா-எப்டன் ஜோடி 5-7, 4-6 என்ற செட் கணக்கில் ஸ்பெயின்-அர்ஜென்டினா ஜோடியான மார்செல் கிரானோல்லர்ஸ் மற்றும் ஹொராசியோ ஜெபலோஸ் ஜோடியிடம் தோல்வியடைந்தது. 43 வயதான போபண்ணா ஏடிபி பைனல்ஸ் போட்டியில் விளையாடுவது இது நான்காவது முறையாகும். மறுபுறம் எப்டனுக்கு இது முதல்முறையாகும். போபண்ணா 4 முறை போட்டியிட்டிருந்தாலும், இதுவரை பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விரிவாக படிக்க
வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டனாக நஜ்மல் ஹுசைன் சாண்டோ நியமனம்
நவம்பர் 28 முதல் வங்கதேசத்தில் நடக்க உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. வங்கதேச டெஸ்ட் அணியின் வழக்கமான கேப்டன் லிட்டன் தாஸ் சமீபத்தில் தனக்கு பிறந்த பெண் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதற்காக ஓய்வில் சென்றுள்ள நிலையில், அவருக்கு பதிலாக இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் நஜ்மல் ஹுசைன் சாண்டோ கேப்டனாக செயல்படுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முன்னதாக, சமீபத்தில் ஒருநாள் உலகக்கோப்பையில் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் காயம் காரணமாக விளையாடாத போட்டியில் சாண்டோ கேப்டனாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. விரிவாக படிக்க
ஊக்கமருந்து சோதனையில் தோல்வி; பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 தங்கங்களை இழக்கிறது இந்தியா
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் யாதவ் போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பு, தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு ஏஜென்சி (நாடா) நடத்திய ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ளார். இதனால் ஹாங்சோவில் நடந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியின் போது வென்ற இரண்டு தங்கப் பதக்கங்களை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நீரஜ் ஹாங்ஜோவிற்கு புறப்படுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு பெங்களூரில் நடத்தப்பட்ட போட்டிக்கு வெளியே நடத்தப்பட்ட சோதனையில் அனபோலிக் ஸ்டெராய்டு பயன்படுத்தியது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதற்காக அவரது தங்க பதக்கங்கள் பறிக்கப்பட்டால், இந்தியா பதக்கப்பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு பின்தங்க வேண்டி இருக்கும்.
பிரகாஷ் படுகோனின் வழிகாட்டுதலில் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பிவி சிந்து
இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து தனது வழிகாட்டியாக முன்னாள் பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனை இணைத்துள்ளார். முன்னதாக, கடந்த ஆண்டு ஏற்பட்ட கணுக்கால் காயத்தில் இருந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டு வந்த பிவி சிந்து சில தொடர்களில் சிறப்பாக செயல்பட்டாலும், எந்தவொரு பட்டத்தையும் கைப்பற்றவில்லை. இந்நிலையில், அடுத்த ஆண்டு பாரிசில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ள நிலையில், அதில் எப்படியும் தங்கம் வென்றே தீர வேண்டும் என்ற உறுதியுடன் உள்ள பிவி சிந்து, அதற்காக தன்னை தயார் செய்வதற்காக பிரகாஷ் படுகோனுடன் இணைந்துள்ளார். பெங்களூரில் உள்ள பிரகாஷ் படுகோனின் பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சியை மேற்கொள்ள உள்ளார். விரிவாக படிக்க
பாகிஸ்தான் கிரிக்கெட் யு19 அணியின் தலைமை பயிற்சியாளராக முகமது யூசுப் நியமனம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) சனிக்கிழமையன்று ஆசிய கோப்பை மற்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்க உள்ள யு19 உலகக்கோப்பைக்கு முன்னதாக தேசிய யு-19 அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் முகமது யூசுப்பை நியமித்தது. பிசிபி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் தன்வீரை ஜூனியர் தேர்வுக் குழுவின் தலைவராக அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு யூசுப்பின் நியமனம் வந்துள்ளது. முன்னதாக, சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் உலகக்கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் தினம் தினம் மாற்றங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.