ஆர்பிஐ நிதிக் கொள்கை 2026: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
மத்திய பட்ஜெட் 2026 க்கு பிந்தைய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முதல் நிதித்துறைக் கொள்கை முடிவுகளை ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று (பிப்ரவரி 6, 2026) அறிவித்தார். மூன்று நாட்கள் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு (MPC) கூட்டத்தின் முடிவில், வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதமான ரெப்போ ரேட் (Repo Rate) 5.25% என்ற அளவிலேயே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சந்தை நிபுணர்கள் ஏற்கனவே எதிர்பார்த்த ஒரு முடிவாகும்.
வர்த்தக ஒப்பந்தம்
பொருளாதார வளர்ச்சி மற்றும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்
இந்தியப் பொருளாதாரம் வலுவான வளர்ச்சியில் இருப்பதாலும், அமெரிக்காவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இறக்குமதி வரி அழுத்தம் குறைந்திருப்பதாலும் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி கருதுகிறது. ஆர்பிஐ தனது நிதிக் கொள்கையை "Neutral" (நடுநிலை) என்ற நிலையில் வைத்துள்ளது. இதன் மூலம் வட்டி விகிதங்கள் நீண்ட காலத்திற்கு இதே நிலையில் நீடிக்க வாய்ப்புள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற சூழலிலும் இந்தியா தொடர்ந்து வேகமான வளர்ச்சியை எட்டி வருவதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இழப்பீடு
டிஜிட்டல் பண மோசடி: வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு
இன்றைய கூட்டத்தில் சாதாரண மக்களுக்குப் பயன் தரும் வகையில் ஒரு முக்கியமான அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டார். சிறிய அளவிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் மோசடி (Digital Transaction Frauds) ஏற்பட்டு நஷ்டம் அடைந்தால், வாடிக்கையாளர்களுக்கு ₹25,000 வரை இழப்பீடு வழங்குவதற்கான புதிய கட்டமைப்பு முன்மொழியப்படும் என்று தெரிவித்தார். இது டிஜிட்டல் பரிவர்த்தனை பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும்.
கணிப்பு
ஜிடிபி மற்றும் பணவீக்கம் கணிப்பு
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் விலைவாசி உயர்வு குறித்த கணிப்புகளையும் ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 6.9% ஆக இருக்கலாம். நடப்பு நிதியாண்டின் சில்லறை பணவீக்கம் 2.1% ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இது 4% ஆக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது. மேலும், வங்கிகள் கடன்களை வசூலிக்கும் போது ரிகவரி ஏஜென்ட்களைப் பயன்படுத்துவது மற்றும் தவறான கடன் விற்பனையைத் தடுப்பது குறித்த புதிய வழிகாட்டுதல்களும் விரைவில் வெளியிடப்படும் என்று ஆளுநர் மல்ஹோத்ரா உறுதி அளித்தார்.