Loading...
யூடியூப்பில் இனி பணம் சம்பாதிக்க புதிய விதிகளா? தகுதி வரம்பை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்ட கூகுள்
படைப்பாளிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

யூடியூப்பில் இனி பணம் சம்பாதிக்க புதிய விதிகளா? தகுதி வரம்பை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்ட கூகுள்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 11, 2026
10:35 am

செய்தி முன்னோட்டம்

யூடியூப் தளத்தில் வெளியாகும் வீடியோக்கள் மற்றும் ஷார்ட்ஸ் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான தகுதி வரம்புகளை இருமடங்காக உயர்த்தி, புதிய படைப்பாளிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. யூடியூப் பார்ட்னர் திட்டத்தில் இணைந்து விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பும் புதிய கிரியேட்டர்கள், இனி கடந்த ஓராண்டில் 8,000 பார்வையாளர் மணிநேரங்கள் அல்லது கடந்த 90 நாட்களில் 2 கோடி (20 Million) ஷார்ட்ஸ் பார்வைகளை பெற்றிருக்க வேண்டும். இதற்கு முன்பு 4,000 மணிநேரம் அல்லது 1 கோடி பார்வைகள் மட்டுமே தேவையான தகுதியாக இருந்த நிலையில், இந்த புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கட்டுப்பாடுகள்

ஷார்ட்ஸ் படைப்பாளிகளுக்கான கட்டுப்பாடுகள்

ஏற்கனவே பார்ட்னர் திட்டத்தில் உள்ள கிரியேட்டர்களுக்கு புதிய சேர்க்கை வரம்புகள் பொருந்தாது என்றாலும், ஷார்ட்ஸ் மூலம் தொடர்ந்து வருமானம் பெறத் தொடர்ச்சியாக 90 நாட்களில் 1 கோடி பார்வைகளை பராமரிக்க வேண்டியது அவசியமாகும்.

ஒருவேளை பார்வைகள் குறைந்தால் ஷார்ட்ஸ் வருவாய் தற்காலிகமாக நிறுத்தப்படும்; எனினும் நீண்டநேர வீடியோக்கள் மூலமாக அவர்கள் தொடர்ந்து வருமானம் ஈட்ட முடியும்.

யூடியூப்பின் அதிவேக வளர்ச்சி மற்றும் தினமும் 2,000 கோடிக்கும் அதிகமான ஷார்ட்ஸ் பார்வைகள் பதிவாவதே இந்நடவடிக்கைக்குக் காரணமாக கூறப்படுகிறது.

இதனிடையே, விளம்பரமில்லா குறைந்த கட்டணச் சேவையான 'Premium Lite' திட்டத்தை அனைத்து நாடுகளுக்கும் விரிவாக்குவதாக யூடியூப் அறிவித்துள்ளது.

இதன் மூலம் கிடைக்கும் சந்தா வருவாயில் ஒரு பகுதி படைப்பாளிகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.

போட்டி

சமூக ஊடகப் போட்டிகளும் புதிய தாக்கமும்

இந்த புதிய விதிமுறைகள் வரும் பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகின்றன.

கூகுள் நிறுவனத்தின் இந்த திடீர் முடிவு புதிய படைப்பாளிகளுக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் எக்ஸ் (X) மற்றும் ஃபேஸ்புக் போன்ற பிற சமூக ஊடக நிறுவனங்களும் தங்களது படைப்பாளி ஊக்கத் திட்டங்களை மாற்றியமைத்துள்ள நிலையில், டிஜிட்டல் தளங்களில் போட்டி மேலும் தீவிரமடைந்துள்ளது.

ADVERTISEMENT