சென்னையில் இலவச WiFi வசதி: மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் மீண்டும் தொடக்கம்
செய்தி முன்னோட்டம்
சென்னையின் முக்கிய சுற்றுலா தலங்களான மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில், பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாமல் இருந்த 32 இலவச Wi-Fi மையங்கள் மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகமாக கூடும் கடற்கரைப்பகுதிகளில் தடையற்ற இணையச் சேவையை வழங்கும் நோக்கத்துடன் தமிழக அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, மெரினா கடற்கரையில், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 27 முக்கிய இடங்களிலும், பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதியில் 5 இடங்களிலும் இலவச வைபை வசதி உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளது.
வழிமுறை
WiFi இணைப்பைப் பெறும் எளிய வழிமுறைகள்
பொதுமக்கள் தங்கள் மொபைலில் WiFi சேவையை ஆன் செய்து, திரையில் தோன்றும் QR Code குறியீட்டை க்ளிக் செய்யவேண்டும்.
பின்னர் தங்களது மொபைல் எண்ணைப் பதிவு செய்து, குறுஞ்செய்தியாக வரும் OTP எண்ணை உள்ளீடு செய்தவுடன் இலவச இணைய இணைப்பு தடையின்றி கிடைக்கும்.
சென்னை தி.நகர் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள், இதர கடற்கரைப் பகுதிகள், பொதுப் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்கள் ஆகிய இடங்களில் செயல்படாமல் இருக்கும் வைபை மையங்களைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேலும், மக்கள் அதிகம் கூடும் பிற பொது இடங்களிலும் புதிய இலவச வைபை மையங்களை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.