கோலி, ரோஹித் ஓய்வால் கிரிக்கெட் ஆர்வம் குறையவில்லை: வீரேந்திர சேவாக் கருத்து
செய்தி முன்னோட்டம்
இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் தூண்களாக விளங்கிய விராட் கோலி, ரோஹித் ஷர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, டெஸ்ட் போட்டிகளைப் பார்க்கும் ரசிகர்களின் ஆர்வம் குறைந்துவிட்டதாகக் கூறப்படும் வாதங்களை முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் மறுத்துள்ளார். கிரிக்கெட் என்ற விளையாட்டின் புகழ் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒருசில குறிப்பிட்ட நட்சத்திர வீரர்களை மட்டுமே சார்ந்து அமைந்திருக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜாம்பவான்கள்
கவாஸ்கர், கபில்தேவ், சச்சின் காலத்து உதாரணம்
ரசிகர்களின் மனநிலை குறித்து ஊடக நேர்காணலில் பேசிய வீரேந்திர சேவாக், விராட் கோலிக்காகவோ அல்லது ரோஹித் ஷர்மாவுக்காகவோ மட்டுமே தாங்கள் கிரிக்கெட் பார்ப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.
இதேபோன்ற பேச்சுக்கள் சுனில் கவாஸ்கர், கபில்தேவ் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் ஓய்வு பெற்ற காலத்திலும் மிகத் தீவிரமாகப் பேசப்பட்டன.
ஆனாலும் மக்கள் முன்னெப்போதையும் விடத் தொடர்ந்து கிரிக்கெட்டை ரசித்துப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
உண்மையில் சொல்லப்போனால், முன்பு டிவியில் மட்டுமே பார்த்து வந்த கிரிக்கெட், தற்போது அனைவரது ஸ்மார்ட்போன்களிலும் எளிதாகக் கிடைப்பதால் கிரிக்கெட் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்று கூறினார்.
புதிய தலைமை
கிரிக்கெட்டர்களை விட விளையாட்டுதான் பெரியது
தான் ஓய்வு பெற்றபோதும் பலர் இதேபோன்று கூறியதாக நினைவுகூர்ந்த சேவாக், நீங்கள் விளையாடுவதை நிறுத்தியதால் நாங்கள் கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்திவிட்டோம் என்று என்னிடமும் பலர் கூறியுள்ளனர்.
ஆனால் உண்மை அதுவல்ல. அவர்கள் ஏதோ ஒரு வகையில் இப்போதும் கிரிக்கெட்டைப் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
குறிப்பிட்ட ஒருசில வீரர்களால் மட்டுமே இந்த விளையாட்டு இயங்குகிறது என்றால், இந்நேரம் கிரிக்கெட்டே எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும் என்று வெளிப்படையாகத் தெரிவித்தார்.
கோலி மற்றும் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெற்று சுமார் ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில், சுப்மன் கில் தலைமையில் புதிய இந்திய அணி டெஸ்ட் அரங்கில் வெற்றிகரமாகப் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.