சவுதி அரேபியா அணுகுண்டு தயாரிக்க திட்டமா? அமெரிக்க உளவுத்துறை அறிக்கையால் டிரம்பின் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு
செய்தி முன்னோட்டம்
சவுதி அரேபியா எதிர்காலத்தில் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான வாய்ப்புகளை இன்னும் முழுமையாக நிராகரிக்கவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் தயாரித்துள்ள ரகசிய அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பகிரப்பட்ட இந்த மதிப்பீட்டு அறிக்கை, டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சவுதியுடன் மேற்கொண்ட சிவில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்துப் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தம் சவுதிக்கு அணுகுண்டு தயாரிக்க உதவும் கருவிகளை வழங்கி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய அணு ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என எம்பிக்கள் அஞ்சுகின்றனர்.
ஒப்பந்தம் மற்றும் எதிர்ப்பு
டிரம்பின் அணுசக்தி ஒப்பந்தமும் ஜனநாயகக் கட்சி எம்பிக்களின் பலத்த எதிர்ப்பும்
அமெரிக்க நிறுவனங்கள் சவுதி அரேபியாவில் சிவில் அணுசக்தி திட்டங்களை அமைக்க அனுமதிக்கும் ஒப்பந்தத்தை டிரம்ப் நிர்வாகம் ஜூலை மாதம் அறிவித்தது.
ரஷ்யா மற்றும் சீனாவிடம் சவுதி செல்வதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என வெள்ளை மாளிகை கூறியது.
ஆனால், இந்த ஒப்பந்தம் சவுதி அரேபியா 20 சதவீதம் வரை யுரேனியத்தை செறிவூட்ட வழிவகுக்கும் என ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
செனட்டர்கள் எட் மார்க்கி மற்றும் ஜெஃப் மெர்க்லி ஆகியோர் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிற்கு இது தொடர்பாகக் காரசாரமான கடிதம் எழுதியுள்ளனர்.
விளக்கம்
வெளியுறவுத்துறையின் விளக்கம் மற்றும் முகமது பின் சல்மானின் பழைய பேச்சு
இந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை சமர்ப்பித்துள்ள அறிக்கையில், அமெரிக்கா சவுதியின் அணு ஆயுதத் திட்டத்திற்கு ஒருபோதும் ஆதரவு அளிக்காது என்றும், கண்டிப்பான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.
இருப்பினும், 2018 ஆம் ஆண்டில் சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் அளித்த பேட்டியில், ஈரான் அணு ஆயுதம் தயாரித்தால் சவுதியும் உடனடியாக அணு ஆயுதம் தயாரிக்கும் எனக் கூறியிருந்தார்.
அவரது அந்த பழைய பேச்சு தற்போதைய சர்ச்சைக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
தற்போது இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய நாடாளுமன்றத்திற்கு 90 நாட்கள் அவகாசம் உள்ளது.