Loading...
ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ்: புதிய வரலாறு படைத்த 18 வயது அனாஹத் சிங்; இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தல்
ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை அனாஹத் சிங்.

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ்: புதிய வரலாறு படைத்த 18 வயது அனாஹத் சிங்; இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தல்

எழுதியவர் Vasuki
Sep 26, 2026
01:54 pm

செய்தி முன்னோட்டம்

ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் 18 வயது இளம் ஸ்குவாஷ் நட்சத்திரம் அனாஹத் சிங், தனது விளையாட்டு வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து புதிய வரலாறு படைத்துள்ளார். சனிக்கிழமை காலை நடைபெற்ற மகளிர் தனிநபர் ஸ்குவாஷ் அரையிறுதி ஆட்டத்தில், போட்டியை நடத்தும் நாடான ஜப்பானின் நட்சத்திர வீராங்கனையும், உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ளவருமான சடோமி வட்டனாபேவை 3-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அனாஹத் சிங் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் மகளிர் தனிநபர் ஸ்குவாஷ் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

முதலுதவி சிகிச்சை

காயத்தையும் மீறி வெளிப்பட்ட அசாத்திய மீள்தன்மை

இப்போட்டியின் தொடக்கத்தில் உள்ளூர் ரசிகர்களின் பேராதரவுடன் களம் கண்ட ஜப்பான் வீராங்கனை வட்டனாபே, முதல் இரண்டு கேம்களையும் 11-9, 13-11 எனக் கைப்பற்றி 2-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றார்.

போட்டியின் ஒரு கட்டத்தில் பந்தை எடுக்க முயன்றபோது, அனாஹத்தின் தலை எதிரணி வீராங்கனையின் தோள்பட்டையில் மோதியதால் அவருக்குக் காயம் ஏற்பட்டது.

ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு அனாஹத்திற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பெரும் அழுத்தம் மற்றும் காயத்திற்கு மத்தியிலும் மன உறுதியை இழக்காத அனாஹத் சிங், ஆட்டத்தில் அசாத்திய கம்பேக் கொடுத்தார்.

இறுதி போட்டி

தொடர்ச்சியான மூன்று கேம்களை வென்று வரலாற்று வெற்றி

இரண்டு கேம்களை இழந்து பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டெழுந்த 18 வயது இளம் புயல் அனாஹத், மூன்றாவது கேமை 12-10 எனக் கைப்பற்றிப் போட்டியை உயிர்ப்பித்தார்.

தொடர்ந்து அபார ஆதிக்கத்தை நிலைநிறுத்தி நான்காவது கேமை 11-6 எனக் கைப்பற்றி ஆட்டத்தை 2-2 என சமன் செய்தார்.

வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி கேமில் முழு ஆதிக்கத்தையும் செலுத்திய அனாஹத், 11-3 என்ற கணக்கில் வட்டனாபேவை வீழ்த்தி 9-11, 11-13, 12-10, 11-6, 11-3 என்ற புள்ளிக் கணக்கில் வரலாற்று வெற்றியை உறுதி செய்தார்.

இதன் மூலம் நடப்பு ஆண்டில் வட்டனாபேவிடம் அடைந்த தோல்விக்குப் பழிதீர்த்துக் கொண்ட அனாஹத் சிங், ஆசிய விளையாட்டின் வரலாற்றுத் தங்கப் பதக்கத்தை வெல்லும் விளிம்பில் நிற்கிறார்.

ADVERTISEMENT