Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 19) நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் அரைசதம் அடித்தனர். மறுபுறம், ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் சதமடித்ததோடு, மார்னஸ் லாபுசாக்னே அரைசதம் விளாசிய நிலையில், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது. விரிவாக படிக்க
விராட் கோலிக்கு தொடர்நாயகன் விருது
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியைத் தழுவிய நிலையில், தொடர் நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். விராட் கோலி இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக செயல்பட்டு 95.65 என்ற அதிகபட்ச சராசரியுடன் 765 ரன்கள் குவித்தார். இதில் 3 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும். இதன் மூலம் 2003இல் சச்சின் டெண்டுல்கர் மற்றும் 2011இல் யுவராஜ் சிங்கிற்கு பிறகு ஒருநாள் உலகக்கோப்பையின் ஆட்டநாயகன் விருதை வென்ற மூன்றாவது வீரர் ஆனார். மேலும், ஐசிசி உலகக்கோப்பை போட்டிகளில், 2014 மற்றும் 2016 டி20 உலகக்கோப்பைகளில் தொடர்நாயகன் விருதை வென்றுள்ள நிலையில், தற்போது மூன்றாவது முறையாக வென்றுள்ளார். விரிவாக படிக்க
தமிழ்நாடு ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதி
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஹாக்கி இந்தியா 13வது சீனியர் தேசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு இமாச்சல பிரதேசத்தை வீழ்த்தியது. தமிழ்நாடு சார்பில், எஸ்.மாரீஸ்வரன் மற்றும் கே.செல்வராஜ் தலா 3 கோல்கள், சி.தினேஷ்குமார் மற்றும் எஸ்.கார்த்தி தலா இரண்டு கோல்கள் அடித்த நிலையில், பி.சோமன்னா 4, ஜி.எம்.பிருத்வி மற்றும் சுந்தரபாண்டி தலா ஒரு கோல் அடித்தனர். மறுபுறம் இமாச்சல பிரதேசம் சார்வில் ஷுபம் 1 கோல் அடித்த நிலையில், இறுதியில் 13-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்றது. இதன் மூலம் குழுநிலை ஆட்டத்தில் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
தோனியால் முடியாததை முடித்துக் காட்டிய கேஎல் ராகுல்
ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ஒரு சீசனில் அதிக முறை பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை கேஎல் ராகுல் படைத்துள்ளார். முன்னதாக, இந்திய அணியின் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 16 விக்கெட்டுகளுடன் இந்த சாதனையை தக்கவைத்திருந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் 17வது விக்கெட்டை வீழ்த்தி இந்த சாதனையை முறியடித்துள்ளார். இந்திய அணியின் ஜாம்பவான் மற்றும் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை கொண்டுள்ள எம்எஸ் தோனியாலேயே ராகுல் டிராவிட்டின் சாதனை முறியடிக்கப்பட முடியாத நிலையில், ராகுல் இதை செய்துள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற நான்காவது வீரர் ஆனார் டிராவிஸ் ஹெட்
ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் இந்தியாவுக்கு எதிரான 2023 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதியிலும் ஆட்டநாயகன் விருதை வென்ற நிலையில், ஒரு உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற நான்காவது வீரர் ஆனார். இந்தியாவின் மொஹிந்தர் அமர்நாத் 1983இல் இந்த சாதனையை முதன்முதலில் செய்தார். பின்னர் இலங்கையின் அரவிந்த டி சில்வா 1996 லும், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் 1999 லும் செய்தனர்.