Sports Round Up: நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி; 5 பேட்டர்கள் அரை சதம் அடித்து அசத்தல்; முக்கிய விளையாட்டுச் செய்திகள்
ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 44வது போட்டியில் நேற்று நெதர்லாந்து மற்றும் இந்திய அணிகள் விளையாடின. நேற்றைய போட்டிக்கான டாஸை வென்ற இந்திய அணி பேட்டிங்'ஐ தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 410 ரன்களை குவித்து, நெதர்லாந்து அணிக்கு 411 என்னும் இலக்கினை வெற்றிக்காக நிர்ணயித்தது. அதன்பிறகு தீவிரமாக களத்தில் இறங்கி விளையாடிய நெதர்லாந்து அணி இலக்கினை சேஸ் செய்ய கடுமையாக முயற்சித்தது என்றே கூறவேண்டும். இப்போட்டியில் வென்றாலும் உலகக்கோப்பை தொடரில் தொடர முடியாது என்னும் நிலையில், நெதர்லாந்து கிரிக்கெட் அணி 47.5 ஓவரில் 250 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகியது. இதன்மூலம் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதிக சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்த ரோஹித் ஷர்மா
வெகுநாட்களுக்கு பிறகு ரோஹித் ஷர்மா இப்போட்டியில் சதம் அடித்ததை தொடர்ந்து, உலகளவில் அதிகளவு சர்வதேச சிக்ஸர்களை அடித்து, விளாசிய இந்திய கிரிக்கெட் வீரர் என்னும் பெருமையினை பெற்றுள்ளார். அவர் ஒரு உலக கோப்பை தொடரில் 24 சிக்ஸர்களை அடித்து, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ் கடந்த 2015ம் ஆண்டு 21 சிக்ஸர்கள் அடித்த சாதனையையும், இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான மோர்கன் கடந்த 2019ம் ஆண்டு 22 சிக்ஸர்களை அடித்து பெற்ற சாதனையையும் முறியடித்தார். மேலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இவர் 5 சிக்ஸர்களை அடித்து, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயில் சாதனையினையும் முறியடித்துள்ளார்.
இந்தியாவின் முதல் 5 பேட்டர்களும் அரை சதம் விளாசி அசத்தல்
நேற்று நடந்த இந்திய- நெதர்லாந்து ஆட்டத்தின் போது இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ், கே.எல்.ராகுல் ஆகிய 5 தொடக்க வீரர்களும் அரை சதம் விளாசி புதிய சாதனை படைத்தனர். 50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் முதல்முறையாக, முதல் 5 பேட்டர்களும் அரை சதம் விளாசி இருக்கின்றனர். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடப்பது இது 3வது முறையாகும். அது போக, நேற்றைய போட்டியின் மூலம், நடப்பு உலககோப்பை தொடரில் அதிக ரன்கள்(594 ரன்கள்) எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினார் விராட் கோலி. இதற்கு முன்னதாக தென்னாபிரிக்க வீரர் குயின்டன் டி காக் 591 ரன்கள் எடுத்து முதலிடத்தில் இருந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 100வது அரை சதம் அடித்த ரோஹித் ஷர்மா
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடிய இந்திய வீரர் ரோஹித் ஷர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதற்கிடையில், நேற்று ஆரம்ப பேட்டர்களில் ஒருவராக களமிறங்கிய சுப்மன் கில், நடப்பாண்டில் 2000 ரன்களை கடந்த வீரர் என்ற பெயரை பெற்றுள்ளார். 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்திற்கு எதிராக விளையாடி அரை சதத்தை அடித்து, இந்த புதிய மைல் கல்லையும் சுப்மன் கில் எட்டியுள்ளார். சுப்மன் கில்லுக்கு பிறகு விளையாடிய கே.எல்.ராகுல், இந்திய அணியில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அதிவேக சதத்தை அடித்து அசத்திய கே.எல்.ராகுல்;
5வது பேட்டராக விளையாடிய கே.எல்.ராகுல் 64 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். நேற்று மட்டும் அவர் 4 சிக்சர்களையும் 11 பவுண்டரிகளையும் அடித்து விளாசினார். அதன் மூலம், ராகுல் ஒருநாள் போட்டிகளில் தனது ஏழாவது சதத்தையும், ஐசிசி உலகக் கோப்பையில் தனது இரண்டாவது சதத்தையும் பதிவு செய்தார். கூடுதலாக, ராகுல் 62 பந்துகளில் சதம் அடித்து, ஒருநாள் உலகக் கோப்பையில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார். மேலும், ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக பங்கேற்ற ஸ்ரேயாஸ் ஐயர் தனது முதல் சதத்தை அடித்து விளாசினார்.