ஆணியை வீசி தாக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்; இர்பான் பதான் பரபரப்புத் தகவல்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி கடந்த அக்டோபர் 14 அன்று நடந்து முடிந்துவிட்டது. அதில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தோல்வியை பரிசாக வழங்கிய நிலையில், போட்டி நடந்தபோது ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வீரர்களை நோக்கி ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டது வைரலானது. இதற்கு இந்தியாவில் ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் என கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், இது ஐசிசி நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளதாகக் கூறி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசிக்கு புகார் அளித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் ஊடகவியலாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு போட்டியை காண இந்திய தரப்பில் இருந்து விசா கிடைப்பதில்லை என்ற பிரச்சினையையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் கிளப்பியுள்ளது.
ரசிகர்களின் நடத்தை குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கருத்து
ரசிகர்களின் நடத்தை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எழுப்பியுள்ள புகார் குறித்து பேசிய இர்பான் பதான், ரசிகர்களின் செயல் குறித்து இதுபோல் புகார் அளிக்க தேவையில்லை என்றார். மேலும், கடந்த காலத்தில் இந்திய அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின்போது பெஷாவரில் ரசிகர்கள் கூரான ஆணியை தன்மீது வீசி எறிந்தனர் என்றும் அது தனது கண்ணின் கீழே பட்டதாகவும் கூறியுள்ளார். எனினும், இந்த சம்பவம் குறித்து தாங்கள் யாரும் புகார் அளித்து அழுது புலம்பவில்லை என்றும், மாறாக வெற்றியில் மட்டுமே கவனம் செலுத்தியதாகவும் கூறினார். எனவே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய ரசிகர்கள் குறித்து புகார் கூறுவதை விட்டுவிட்டு அணியின் வெற்றியில் கவனம் செலுத்துவது நல்லது எனக் கூறியுள்ளார்.