உலக நீரிழிவு நோய் தினம் - நோய் ஏற்படும் ஆபத்து, தடுக்கும் முறைகள் குறித்து அறிவீர்
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14ஆம் தேதி, உலக நீரிழிவு நோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு அந்த வருடத்திற்கான கருப்பொருள்ளை தேர்ந்தெடுத்து அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வருடம் 'நீரிழிவு சிகிச்சைக்கான அணுகல்' என்ற தலைப்பில் உலக நீரிழிவு நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. தற்போது உலக அளவில் 54 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளில் வசிப்பவர்கள். நீரிழிவு நோய் ஏற்பட மரபியல் மற்றும் இனம் முக்கிய காரணிகளாக சொல்லப்பட்டாலும், இன்று அவற்றைத் தாண்டி பல காரணிகள் உருவாகியுள்ளது. நீரிழிவு நோய் காரணிகள் குறித்தும், அது ஏற்படாமல் தடுக்க நீங்கள் செய்ய வேண்டியது குறித்தும் இத்தொகுப்பில் பார்க்கலாம்.
மரபியல்
உங்கள் குடும்பத்தினர் (தாத்தா, பாட்டி, பெற்றோர், உடன்பிறப்புகள்) நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கும் வகை 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதை மாற்ற முடியாத ஆபத்துக் காரணி என்கிறார்கள். தடுக்கும் வழிமுறைகள்: நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுக்கவும், தள்ளிப் போடவும் முடியும்.
இனம்
ஒரு சில இன மக்களுக்கு மற்றவர்களை விட நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. ஆசியர்கள்(தெற்காசியாவில் உள்ள இந்தியர்கள் உட்பட) உலகில் நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இனமாகும். இதற்கு குறைந்த பிறப்பு எடை, ஊட்டச்சத்து மாற்றம், மரபியல் உள்ளிட்டவை காரணமாக சொல்லப்படுகிறது. தடுக்கும் வழிமுறைகள்: இந்த இனத்தைச் சார்ந்தவர்கள் சரியான கால இடைவேளையில், நீரிழிவு நோய்க்கான பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது. வாழ்க்கை முறை மாற்றங்களும், காற்று மாசு, வறுமை உள்ளிட்டவற்றை குறைக்கும் அரசாங்க கொள்கைகளும் இதற்கு உதவும்.
அதிக எடை மற்றும் உடல் பருமன்
அதிக எடை மற்றும் உடல் பருமன் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்துகளை பல மடங்கு அதிகரிக்கிறது. தேசிய குடும்ப சுகாதார ஆய்வு 5, பெண்களின் உடல் எடை தொடர்ந்து அதிகரிப்பதை சுட்டிக்காட்டுகிறது. உடல் பருமன் கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியக்கூறுகளை உண்டாக்குகிறது. மேலும் நீரிழிவு நோயின் சில சிக்கல்களை அதிகரிக்கிறது. தடுக்கும் வழிமுறைகள்:குழந்தை பருவத்திலிருந்து சீரான உணவுப் பழக்க வழக்கம், உடல் ரீதியாக சுறுசுறுப்பான வாழ்க்கை முறை, உள்ளிட்டவை உடற்பருமன் ஏற்படாமல் தடுக்கலாம்.
உயர் ரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இரண்டுமே பெரும்பாலும் ஒன்றாக நிராகரிக்கப்படும் இரட்டை ஆபத்துக்கள் ஆகும். உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாத போது சிறுநீரகம் மற்றும் இதய நோய்க்கான ஆபத்தை கணிசமாக அதிகரிக்கிறது. தடுக்கும் வழிமுறைகள்:நீரிழிவு நோய்க்கான பரிசோதனை மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ள நபர்களுக்கு, ரத்த அழுத்த கட்டுப்பாட்டை மேம்படுத்துதல் மூலம் இதை சரி செய்ய முடியும்.
கர்ப்பகால நீரிழிவு
இந்தியாவில் 10-15% கர்ப்பிணிகளுக்கு, கர்ப்பகால நீரிழிவு நோய் ஏற்படுகிறது. மேலும், கர்ப்பத்திற்கு பின்னரான 5-10 ஆண்டுகள் பெண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. தடுக்கும் வழிமுறைகள்: முன் பரிசோதனைகள் மூலம் கர்ப்பகால நீரிழிவு நோயைத் தடுப்பதும், பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம், உடல் பருமன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இதற்கு பயன்படும். தாய்ப்பால் வழங்குவது, பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னர் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
ஆரோக்கியமற்ற உணவு முறை, சுறுசுறுப்பற்ற வாழ்க்கை முறை
அதிகமான கலோரிகளை உட்கொள்வது நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், நம் உணவில் நாம் எடுத்துக் கொள்ளும் செயற்கை இனிப்பு பானங்கள், துரித உணவுகள், வெள்ளை அரிசி, வறுத்த மற்றும் உப்பு உணவுகளும் நீரிழிவு நோயை தூண்டலாம். சுறுசுறுப்பற்ற வாழ்க்கை முறை, வகை 2 நீரிழிவு நோயை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காரணிகளான உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை சுறுசுறுப்பற்ற வாழ்க்கை முறை அதிகரிக்கிறது. தடுக்கும் வழிமுறைகள்: அதிக கலோரி உணவுகளை தவிர்த்து, காய்கறிகள், பழங்கள், தானியங்கள், அதிக புரதச்சத்து கொண்ட மாமிச உணவுகளை உட்கொள்ளலாம். சிறு வயது முதலான சுறுசுறுப்பான வாழ்க்கை முறை நீரிழிவு நோயை தடுக்கலாம். தினமும் 30-60 நிமிட உடற்பயிற்சி அவசியம்.
நீரிழிவு நோயை ஏற்படுத்தும் பிற காரணிகள்
குறைவான இடையில் குழந்தைகள் பிறப்பது, மன உளைச்சல், புகை பிடிப்பது, சரியான தூக்கம் இன்மை, வறுமை மற்றும் சமூக ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் காரணிகள் உள்ளிட்ட பிற பல காரணிகள் நீரிழிவு நோயை ஏற்படுத்தலாம். இவை அல்லாமல், நீரிழிவு நோயை ஏற்படுத்தும் பிற காரணிகளையும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இருப்பினும் நீரிழிவு நோய் குறித்து நீங்கள் கவலைப்பட தேவையில்லை. 75% அல்லது அதற்கு மேற்பட்ட சமயங்களில் நீரிழிவு நோய் தடுக்கப்படக்கூடியது. சரியான விழிப்புணர்வு, ஈடுபாடு ஆகியவை நீரிழிவு நோயை தடுப்பதில் முதன்மையானவை. மேலும் நோய் ஏற்படும் அபாயங்கள் மற்றும் தடுக்கும் முறைகளை அறிவது அந்த பயணத்தின் முதல் படியாகும்.