2023ல் தமிழக அரசு அறிமுகப்படுத்திய மாஸ் திட்டங்கள் என்னென்ன? - பார்ப்போம் வாருங்கள்
வணிகர்களுக்கான சமாதான திட்டம் வணிகர்கள் நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருக்கும் வரி தொகையினை வசூலிக்க கொண்டுவரப்பட்ட திட்டம் தான் 'வணிகர்களுக்கான சமாதான திட்டம்'. சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வரி நிலுவைத்தொகையினை வசூலிப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, கடந்த அக்டோபரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தினை துவக்கிவைத்தார். இத்திட்டம் மூலம் ரூ.50 ஆயிரத்திற்குகீழ் நிலுவையிலுள்ள வரித்தொகை அதன் வட்டி உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்படி ரூ.147 கோடி நிலுவைத்தொகை தள்ளுபடி செய்யப்பட்டதோடு 1 லட்ச எளிய வணிகர்கள் பயனடைந்தனர். மேலும் மற்ற வணிகர்கள் அரசின் சலுகைகளை அறிந்துக்கொண்டு அதற்கேற்ப தங்கள் வரிக்கான நிலுவைத்தொகையினை செலுத்தலாம் என்றும் கூறப்பட்டது. இத்திட்டமானது வரும் 2024ம்.,ஆண்டு பிப்ரவரி 15ம்.,தேதிவரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பெண்கள் 360 - பணி புரியும் பெண்களுக்கான அரசு தங்கும் விடுதிகள்
இந்தியளவில் பணித்திறனில் பெண்கள் பங்களிப்பு அதிகமுள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பணிபுரியும் பல தமிழக பெண்கள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து வெளியூர் சென்று அங்கேயே தங்கி பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கான இந்த சூழலில் பணிபுரியும் இடத்திற்கு அருகிலேயே தங்கும் விடுதிகள் அடிப்படை வசதிகளோடு பாதுகாப்பான விடுதிகள் தேவைப்படுகிறது. இவர்களுக்கான இத்தகைய தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவே 'தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம்' என்னும் அமைப்பினை தமிழக அரசு ஆரம்பித்துள்ளது. முதற்கட்டமாக இந்நிறுவனம் சார்பில் சென்னை, பெரம்பலூர், திருநெல்வேலி, திருச்சி, சேலம், விழுப்புரம், தஞ்சாவூர், வேலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 11 விடுதிகள் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலையில் இத்திட்டம் துவங்கப்பட்ட நிலையில், www.tnwwhcl.in என்னும் இணையத்தளத்தில் முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம்
தமிழகத்தில் 'அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம்' கடந்த ஜூலையில் துவங்கப்பட்டது. இத்திட்டமானது தமிழக அரசின் சிறு-குறு மற்றும் நடுத்தரத்தொழில்கள் துறை சார்பில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எதுவும் குறிப்பிடப்படாதநிலையில், 18 வயதுமுதல் 55 வயதுடையோர் இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம். இத்திட்டத்தின்படி தேர்ச்சிப்பெற்ற முதலீடுக்கு 35%மூலதன மானியம் வழங்கப்படும். குறைந்தபட்ச முதலீடு ரூ.10லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், வழங்கப்படும் மானியத்தின் உச்சவரம்பு ரூ.1.50 கோடி. நேரடி விவசாயம், கோழி, மீன், இறால், தேனீ, பட்டுப்பூச்சி உள்ளிட்டவைகள் வளர்ப்பு, பண்ணைக்கு தேவையான உபகரணங்களை வாடகைக்கு அளிக்கும் வணிகம், பால் உற்பத்தி உள்ளிட்டவை இத்திட்டத்தின் கீழ் ஏற்கப்படும். குளிப்பதன சேமிப்புக்கிடங்குகள், கல்யாண மண்டபங்கள்-லாட்ஜ்-மாநாட்டு மையங்கள், பெட்ரோல் பங்க் போன்றவைகளின் வணிகத்திட்ட அறிக்கை இத்திட்டத்தில் ஏற்கப்படும்.
மகளிர் உரிமை தொகை திட்டம்
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் அண்ணா பிறந்தநாளையொட்டி கடந்த செப்டம்பர் 15ம்தேதி துவங்கப்பட்டது. இத்திட்டத்தில் தகுதியான இந்த திட்டத்திற்கு கிட்டத்தட்ட 1.70 வரையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தகுதியானவை என்று தேர்வு செய்யப்பட்டது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இத்திட்டம் மூலம் மாதந்தோறும் அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக ரூ.1,000 தமிழக அரசால் செலுத்தப்பட்டது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை மறு ஆய்வு செய்வதற்கான சிறப்பு முகாம்கள் மீண்டும் அமைக்கப்பட்டு அதில் தேர்வு பெற்ற விண்ணப்பங்களுக்கும் தற்போது மாதந்தோறும் ரூ.1000 குடும்பத்தலைவிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட்.,25ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டத்தினை விரிவாக்கம் செய்து வைத்தார். முதற்கட்டமாக இத்திட்டத்தின் கீழ் 1,545 அரசு பள்ளிகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டது. அதன் பின்னரே விரிவாக்கம் செய்யப்பட்டது. காலை உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வரும் ஏழை எளிய மாணவர்களால் எப்படி பாடத்தில் கவனம் செலுத்த முடியும்? என்று எண்ணி இத்திட்டத்தினை செயல்படுத்தியதாக முதல்வர் கூறியுள்ளார். இத்திட்டம் மூலம் லட்சக்கணக்கான பள்ளி மாணவர்கள் பசியின்றி தங்கள் கல்வியில் கவனம் செலுத்தி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இத்திட்டத்தில் சத்தான காலை உணவு வகைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாக் ஃபார் ஹெல்த் திட்டம் ?
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த 'வாக் ஃபார் ஹெல்த்' திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக 8 கிமீ., தூரத்திற்கு நடந்து செல்லும் வகையில் பிரத்யேக சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் நடைப்பயிற்சி, ஜாகிங் உள்ளிட்ட நல்ல பழக்கங்களை ஏற்படுத்தும் நோக்கத்துடனே இத்திட்டம் துவக்கப்பட்டது. குறிப்பாக 8 கி.மீ., ஏன் என்றால் இத்தனை கி.மீ., நடந்தால் 10,000 அடிகள் வரும். 10,000 அடிகள் என்பது ஒரு மனிதர் தினந்தோறும் நடக்கவேண்டிய சுகாதார விதி என்பதால் தான். கடந்த நவம்பர் 4ம் தேதி இத்திட்டத்தினை சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். மருத்துவத்துறையில் இது ஒரு மகத்தான திட்டமாக பார்க்கப்படுகிறது.