வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 156 ஆக உயர்வு, விடிய விடிய நடைபெற்ற மீட்பு பணிகள்
கேரளாவின் வயநாட்டில் உள்ள மேப்பாடியில் நேற்று மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 156 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 130 பேர் காயமடைந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நான்கு மணி நேரத்திற்குள் வயநாட்டில் மூன்று நிலச்சரிவுகள் ஏற்பட்டதால், NDRF மற்றும் இராணுவம் உட்பட பல அமைப்புகள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, அட்டமலா மற்றும் நூல்புழா ஆகிய பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. சாலியாறு ஆற்றில் பலர் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அனைத்து நிவாரண நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்காக பாரா ரெஜிமென்ட்டின் கீழ் ஒரு கட்டுப்பாட்டு மையம் கோழிக்கோடு அமைக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் மற்றும் நிவாரணம்
நிலச்சரிவில் அங்கிருந்த நிரந்தர பாலம் அடித்துச் செல்லப்பட்டதையடுத்து, தற்காலிக பாலம் மூலம் 1,000க்கும் மேற்பட்டவர்களை இராணுவம் மீட்டுள்ளது என்று செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களுக்காக மருத்துவக் குழுக்கள் உட்பட மொத்தம் 225 ராணுவ வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில், திருவனந்தபுரத்தில் சுமார் 140 ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது. இந்திய கடற்படையின் குழுவும் மீட்புப் பணிகளுக்கு உதவும் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார். மேலும், மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக புது டெல்லியில் இருந்து பல மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.