வயநாட்டில் நிலச்சரிவு; 70 பேர் பலி, நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்ட மாபெரும் நிலச்சரிவில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் வயநாடு மேப்பாடி அருகே நடந்தது. செய்திகளின்படி, இன்று அதிகாலை 2 மணியளவில் அப்பகுதியில் முதல் நிலச்சரிவு ஏற்பட்டது. பின்னர், 4.10 மணியளவில், மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தீயணைப்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் NDRF குழுவும் வயநாடு நோக்கி சென்று கொண்டிருப்பதாக PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், விமானப்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள், ஒரு எம்ஐ-17 மற்றும் ஒரு ஏஎல்எச் ஆகியவை கோவை சூலூரில் இருந்து மீட்புப் பணிகளுக்காக புறப்படும் என்று ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.
வயநாட்டில் மாபெரும் நிலச்சரிவு
தொடர் மழையால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது
தற்போது வரை, இந்த நிலச்சரிவில் 70 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேப்பாடியில் உள்ள மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (கே.எஸ்.டி.எம்.ஏ) பேஸ்புக் பதிவின்படி, கண்ணூர் பாதுகாப்புப் படையின் இரண்டு குழுக்கள் மீட்புப் பணிகளில் உதவ வயநாட்டிற்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. எனினும் அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் அனைத்து மீட்புப் பணிகளும் ஒருங்கிணைக்கப்படும் எனத்தெரிவித்தார்.