பழைய கசப்புகளை மறப்போம்; பிரதமர் மார்க் கார்னியின் இந்திய வருகைக்கு முன் கனடா எடுத்த அதிரடி முடிவு
செய்தி முன்னோட்டம்
கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று (பிப்ரவரி 26, 2026) இந்தியாவிற்குத் தனது அதிகாரப்பூர்வமான பயணத்தைத் தொடங்குகிறார். இந்தப் பயணத்திற்கு முன்னதாக, கனடா அரசு இந்தியா குறித்து ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, கனடாவில் நடைபெற்ற வன்முறை செயல்களில் இந்தியாவிற்குத் தொடர்பு இல்லை என்று கனடா அரசுத் தரப்பு இப்போது அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. முந்தைய ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய கடும் மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த 'டிப்ளமேட்டிக் ரீசெட்' பார்க்கப்படுகிறது.
வன்முறை செயல்பாடுகள்
வன்முறை செயல்பாடுகள் இப்போது இல்லை - கனடா அதிகாரிகள்
கனடாவின் முக்கிய ஊடகங்களில் ஒன்றான டொராண்டோ ஸ்டார் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, கனடா அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு இடையே வலுவான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்றும், அந்த வன்முறை செயல்பாடுகள் இப்போது தொடரவில்லை என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இத்தகைய அச்சுறுத்தல்கள் இன்னும் நீடிப்பதாகக் கருதினால், பிரதமர் மார்க் கார்னி தற்போது இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ள மாட்டார் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். கடந்த 2023 இல் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய ஏஜெண்டுகளுக்குத் தொடர்பிருப்பதாக ட்ரூடோ சுமத்திய குற்றச்சாட்டால் உறவு மிக மோசமடைந்தது குறிப்பிடத்தக்கது.
முந்தைய குற்றச்சாட்டுகள்
ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளும் இந்தியாவின் பதிலடியும்
ஜஸ்டின் ட்ரூடோ 2023 செப்டம்பரில் சுமத்திய குற்றச்சாட்டுகளை இந்தியா அபத்தமானது மற்றும் உள்நோக்கம் கொண்டது என்று கூறித் திட்டவட்டமாக நிராகரித்திருந்தது. கனடா அரசு காலிஸ்தான் தீவிரவாதிகளுக்குப் புகலிடம் அளிப்பதாகவும், இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக விளங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறுவதாகவும் இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. இப்போது கனடாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மார்க் கார்னி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, இரு நாடுகளும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் உறவைச் சீரமைக்கத் தொடங்கியுள்ளன.
பொருளாதார உறவு
பொருளாதார உறவு மற்றும் 9 நாள் பயணம்
அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசுடன் வர்த்தக சிக்கல்கள் நீடிக்கும் நிலையில், கனடா தனது வர்த்தகத்தைச் சர்வதேச அளவில் விரிவுபடுத்த விரும்புகிறது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட வளர்ந்து வரும் பொருளாதார நாடான இந்தியாவுடன் கைகோர்ப்பது கனடாவிற்கு மிக அவசியமாகிறது. பிரதமர் மார்க் கார்னி இன்று ஒட்டாவாவிலிருந்து புறப்பட்டு மும்பை மற்றும் புதுடெல்லிக்கு வருகை தருகிறார். தனது 9 நாள் பயணத்தின் போது அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார். இதில் எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி முதல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வரை பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.