சென்னை மெட்ரோவில் நள்ளிரவு வரை இலவச பயணம் செய்யலாம்; கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டும்
செய்தி முன்னோட்டம்
சென்னையில் இன்று (பிப்ரவரி 26, 2026) நடைபெறும் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 போட்டியை முன்னிட்டு, ரசிகர்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, இந்தப் போட்டிக்கான நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் ரசிகர்கள், போட்டி நடைபெறும் நாளன்று மெட்ரோ ரயில்களில் இலவசமாகப் பயணம் செய்யலாம். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சியின் மூலம், ரசிகர்கள் போக்குவரத்து நெரிசலின்றி மைதானத்திற்கு வந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வசதி
இலவசப் பயணம் மற்றும் க்யூஆர் கோடு வசதி
இந்தச் சலுகையைப் பெற ரசிகர்கள் தங்களின் கிரிக்கெட் போட்டிக்கான பிரிண்ட் செய்யப்பட்ட டிக்கெட்டுகள் அல்லது டிஜிட்டல் டிக்கெட்டுகளைப் பயன்படுத்தலாம். டிக்கெட்டுகளில் உள்ள தனித்துவமான க்யூஆர் குறியீடுகளை மெட்ரோ நிலையங்களில் உள்ள தானியங்கி நுழைவு வாயில்களில் ஸ்கேன் செய்து பயணம் செய்யலாம். ஒவ்வொரு டிக்கெட்டையும் பயன்படுத்தி ஏதேனும் ஒரு மெட்ரோ நிலையத்தில் இருந்து சேப்பாக்கம் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் நிலையத்திற்கு ஒருமுறை சென்று வர முடியும். இதற்காகத் தனியாகத் டோக்கன் அல்லது கார்டுகள் எடுக்கத் தேவையில்லை.
சேவை நீட்டிப்பு
நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்ட ரயில் சேவைகள்
போட்டி இரவு நேரத்தில் முடிவடைவதால், ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவைகள் நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. அரசினர் தோட்டம் நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் ஆகிய இரு வழித்தடங்களிலும் கடைசி ரயில்கள் நள்ளிரவு 12 மணிக்குக் கிளம்பும். இரவு 11 மணிக்கு மேல் பயணம் செய்பவர்கள் பச்சை வழித்தடத்திற்கு மாற விரும்பினால், சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் மட்டுமே மாற முடியும். கடைசி ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே ரசிகர்கள் நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
சென்னை மெட்ரோவின் அறிவிப்பு
Metro Rail Service to Provide Extended Train Service to Cater to Audience for T20 World Cup Cricket Match in Chennai
— Chennai Metro Rail (@cmrlofficial) February 25, 2026
Chennai Metro Rail Limited (CMRL) is delighted to announce a special collaboration with Tamil Nadu Cricket Association (TNCA) to ensure seamless and convenient…
போராட்டம்
இந்தியாவுக்கு இது வாழ்வா சாவா போராட்டம்
இதற்கிடையே போட்டியைப் பொறுத்தவரை, இன்றைய ஆட்டம் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமானது. கடந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க ஜிம்பாப்வேக்கு எதிரான இந்தப் போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஜிம்பாப்வே அணியும் தனது முதல் சூப்பர் 8 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றிருப்பதால், இரு அணிகளுக்கும் இது மிக முக்கியமான ஆட்டமாகும். இந்த சூழலில், சேப்பாக்கம் மைதானம் ரசிகர்களால் நிரம்பி வழியும் என்பதால் இந்த மெட்ரோ சலுகை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.