தென் மாநிலங்களின் முக்கியக் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு: மக்களவைத் தொகுதிகள் 50% அதிகரிப்பு
செய்தி முன்னோட்டம்
அடுத்த வாரம் தொடங்கவுள்ள நாடாளுமன்றச் சிறப்பு அமர்வில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றுவதற்கான முக்கிய நடவடிக்கையாக, நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை சீராக 50 சதவீதம் உயர்த்தும் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்களுக்குப் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது. புதிய திருத்தங்களின்படி, மாநிலங்களுக்கு இடையிலான தொகுதிப் பங்கீட்டு விகிதம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு, அதாவது 2051-ஆம் ஆண்டு வரை மாற்றமின்றி அப்படியே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை
தென் மாநிலங்களின் முக்கியக் கோரிக்கைக்குத் தீர்வு
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும் எனத் தென் மாநிலக் கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.
இதற்குத் தீர்வு காணும் வகையில், அனைத்து மாநிலங்களுக்கும் சீராக 50 சதவீத இடங்களை அதிகரித்து, தற்போதைய பிரதிநிதித்துவ விகிதாச்சாரத்தைப் பாதுகாக்கும் அம்சம் புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543-லிருந்து சுமார் 815 ஆக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தமிழகத்தின் பிரதிநிதித்துவ விகிதம் குறைக்கப்படக் கூடாது என்றும், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தற்போதைய விகிதாச்சாரமே நீடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.