பெங்களூரு கட்டுமான விபத்து: 4 பேர் பலி, பலர் சிக்கியுள்ளதாக தகவல்
பெங்களூரு பாபுசபல்யா பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) இடிந்து விழுந்ததில் இது வரை ஐவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றும் பலர் இடிபாடுகளிடேயே சிக்கி இருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. கடந்த வாரம் முதல் பெங்களுரு நகரத்தில் பெய்து வரும் கனமழையால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இடிபாடுகளில் இருந்து சிலர் மீட்கப்பட்ட நிலையில், தற்போது மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த முயற்சிகளில் இரண்டு தீயணைப்பு மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மீட்பு வேன்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
கனமழை காரணமாக பெங்களூருவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது
பெங்களூருவின் சில பகுதிகளில், குறிப்பாக வடக்கு பெங்களூரு மற்றும் யெலஹங்காவில் கடுமையான வெள்ளப்பெருக்கிற்கு மத்தியில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. யெலஹங்காவில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் காலை 6:00 மணி வரையிலான ஆறு மணி நேரத்தில் 157 மிமீ மழை பதிவாகியுள்ளது, இதன் விளைவாக கடும் நீர் தேங்கியது. கேந்திரிய விஹார் உட்பட பல பகுதிகள் இடுப்பளவு நீர் மட்டத்தில் மூழ்கியதால் படகுகள் மூலம் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
கனமழையால் நகரின் அன்றாட வாழ்க்கை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே நெரிசல் மிகுந்த நகரில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் பல பயணிகள் விமானம் மற்றும் ரயில்களை தவறவிட்டனர். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள், வாகனங்கள், எலக்ட்ரானிக் பொருட்களும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன.
பெங்களூரு வானிலை நெருக்கடிக்கு அரசு பதில்
இந்நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், "இயற்கையை நம்மால் தடுக்க முடியாது, ஆனால் துன்பத்தை போக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) ஆகிய ஐந்து குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை வெளியேற்ற குழுக்கள் கோரக்கிள்களைப் பயன்படுத்தி வருகின்றன". ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே தலைமை ஆணையர் துஷார் கிரி நாத்தும் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்து, குடியிருப்பாளர்களுக்கு உதவினார்.