
திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்க உள்ள விஜய்: தவெக தேர்தல் பயணம் செப்டம்பர் 13 முதல்
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றிக்கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் தனது சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் எனக் கட்சி வட்டாரத் தகவல்கள் உறுதி செய்கின்றன. இந்நிலையில், விஜய் தலைமையிலான தவெக, தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் திட்டத்தைத் தயாரித்துள்ளதாகவும், முழுமையான கால அட்டவணை ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் மாநில நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். விழாவுக்கான நவீன பிரச்சார பேருந்து தற்போது தவெக தலைமை இடமான பனையூரில் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் செப்டம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விஜய் நேரில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
விவரங்கள்
சுற்றுப்பயணத்தின் போது சமூக செயற்பாட்டாளர்களை சந்திக்க திட்டம்
பிரச்சார இடங்களில் பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை சந்திக்கும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும், பிற கட்சியினரை தவெகவில் இணைக்கும் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தற்போது தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தீவிரமாக பிரச்சார பயணங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் EPS, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரிலும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 'மக்கள் உரிமை மீட்பு நடை பயணம்', தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரிலும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.