
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: பொது இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிய பொதுச் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது 66 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவில் 95 பேர், மஹாராஷ்டிராவில் 56 பேர், கர்நாடகாவில் 13 பேர், புதுச்சேரியில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் நிலவுவதால் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் கவலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் கேரளாவில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்து உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியள்ளது.
இந்த நிலையில்தான் சுகாதாரத்துறையின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிவுறுத்தல்
தமிழக சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்
சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி, "தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது; ஆனால், தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இல்லை. தற்போது, வீரியம் குறைந்த கொரோனா தொற்று பாதிப்பு தான் உள்ளது. 'ஒமைக்ரான்' வகை வைரஸ் உட்பிரிவுகளான, ஜெ.என்., 1 மற்றும் எக்.இ.சி., ஆகிய தொற்றுகளே காணப்படுகின்றன".
"இந்நோயின் தாக்கம் மற்றும் இறப்பின் விகிதம் குறைந்தே காணப்படுகிறது. ஆனாலும், பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடித்தல் அவசியம். காய்ச்சல், நுரையீரல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், அருகில் உள்ள டாக்டரை அணுகி, சிகிச்சை பெறுவது அவசியம்." என தெரிவித்துள்ளனர்.
சென்னை
சென்னையிலும் பரவும் தொற்று
சென்னை மாநகராட்சியின் தகவலின்படி, சென்னையில் தி.நகர், சின்மயா நகர், நடேசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், சமூக பரவலை தவிர்க்க, யாரிடமும் இது குறித்து பகிர வேண்டாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆசியாவில், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைதொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.