LOADING...
உலகையே அதிர வைத்த போதைப்பொருள் கடத்தல் தலைவன் கொலை! யார் இந்த எல் மெஞ்சோ?
CJNG அமைப்பின் தலைவனும், உலகின் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவனுமான 'எல் மெஞ்சோ'

உலகையே அதிர வைத்த போதைப்பொருள் கடத்தல் தலைவன் கொலை! யார் இந்த எல் மெஞ்சோ?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 23, 2026
09:44 am

செய்தி முன்னோட்டம்

மெக்சிகோவின் மிகப்பலவாய்ந்த 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்' (CJNG) அமைப்பின் தலைவனும், உலகின் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவனுமான 'எல் மெஞ்சோ' (நெமேசியோ ஒசெகுவேரா செர்வான்டெஸ்), ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜாலிஸ்கோ மாகாணத்தில் நடைபெற்ற ஒரு ரகசிய ராணுவ தாக்குதலில் எல் மெஞ்சோ படுகாயமடைந்தார். அவரை மேல் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மெக்சிகோ சிட்டிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கடும் அழுத்தத்தை தொடர்ந்து, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். எல் மெஞ்சோவைப் பிடித்துத் தருபவர்களுக்கு அமெரிக்கா ஏற்கனவே 15 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மெக்சிகோ

பற்றி எரியும் மெக்சிகோ

ஜாலிஸ்கோ, குவாடலஜாரா உள்ளிட்ட நகரங்களில் கார்டெல் உறுப்பினர்கள் வாகனங்களுக்குத் தீ வைத்தும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் சாலைகளை முடக்கினர். புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான Puerto Vallarta-வில் வான் வரை கரும்புகை சூழ்ந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. விமான நிலையங்களில் மக்கள் பீதியடைந்து ஓடும் காட்சிகள் பதற்றத்தை அதிகரித்துள்ளன. ஜாலிஸ்கோ ஆளுநர் பாப்லோ லெமஸ் நவரோ, நிலைமை சீராகும் வரை மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். எல் மெஞ்சோவின் மறைவு, லத்தீன் அமெரிக்க நாடுகளில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போரில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அடுத்தத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் கார்டெல் குழுக்களுக்கு இடையே ஏற்படப்போகும் மோதல் மேலும் வன்முறைக்கு வித்திடலாம் என அஞ்சப்படுகிறது.

விவரங்கள்

யார் இந்த எல் மெஞ்சோ?

மிச்சோகன் மாகாணத்தைச் சேர்ந்த இவர், 1990-களிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். அமெரிக்காவில் போதைப்பொருள் வழக்கில் சிறை சென்று நாடு கடத்தப்பட்டவர். பின்னர் 2009-இல் சிஜேஎன்ஜி (CJNG) என்ற அமைப்பைத் தொடங்கி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா வரை தனது கடத்தல் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினார். அமெரிக்காவிற்கு அதிகப்படியான ஃபெண்டானில் (Fentanyl) மற்றும் கோகோயின் கடத்தியதாக இவர் மீது பல வழக்குகள் உள்ளன. கடந்த 2022-ஆம் ஆண்டிலும் இவர் மீது அமெரிக்காவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement