LOADING...
பாரசீக வளைகுடாவில் சிக்கிய 9 இந்தியக் கப்பல்கள்; 198 இந்திய மாலுமிகளை மீட்க மோடி அரசு நடவடிக்கை
வளைகுடா பகுதியில் 9 இந்தியக் கப்பல்களும், அவற்றில் 198 இந்திய மாலுமிகளும் சிக்கித் தவித்து வருகின்றனர்

பாரசீக வளைகுடாவில் சிக்கிய 9 இந்தியக் கப்பல்கள்; 198 இந்திய மாலுமிகளை மீட்க மோடி அரசு நடவடிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 09, 2026
09:39 am

செய்தி முன்னோட்டம்

ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா -ஈரான் இடையே போர் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்குள்ள கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் LPG எரிவாயுவுடன் 9 இந்தியக் கப்பல்களும், அவற்றில் 198 இந்திய மாலுமிகளும் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு, ஈரானுடன் நேரடியாக அவசரப் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முற்றிலும் முறிந்து, அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது நாளாக விடிய விடிய ஈரானியத் துறைமுகங்கள் மீது குண்டுமழை பொழிந்து வருவதால், உலகிலேயே மிக முக்கியமான இந்த எரிசக்தி வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்திய மாலுமிகள்

198 இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பாரசீக வளைகுடாவில் தங்கியுள்ள இந்திய கப்பல்கள் மற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பிற்கு முழு உத்தரவாதம் கோர இந்தியா திட்டமிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, தற்போது ஹார்முஸ் நீரிணையின் மேற்குப் பகுதியில் 9 இந்தியக் கொடி ஏந்திய வணிகக் கப்பல்கள் மட்டுமே நிலைகொண்டுள்ளன. அவற்றில் 198 இந்திய மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர்.

தாக்குதல்

இந்தியாவிற்கு வந்த கப்பல் மீது தாக்குதல்

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பானில் இருந்து குஜராத்தின் துறைமுகத்திற்கு LNG ஏற்றிக்கொண்டு வந்த கத்தார் நாட்டு கப்பல் ஒன்று, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏவுகணையால் தாக்கப்பட்டது. அந்தக் கப்பலின் இன்ஜின் அறையில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. அந்தக் கப்பலில் 4 இந்திய மாலுமிகள் இருந்தனர். நல்வாய்ப்பாக பெரும் சேதங்களுடன் அந்தக் கப்பல் தொடர்ந்து இந்தியா நோக்கி தனது பயணத்தைத் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா நடத்திய முதல் கட்டத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கு வர வேண்டிய 6 வணிகக் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்றன. ஆனால், அங்கு நிலவும் மிக மோசமான போர்ச் சூழல் காரணமாக, ஓமன் நுனியை அடைந்தவுடன் தனது பயணப் பாதையை மாற்றிப் பின்வாங்கியுள்ளது.

Advertisement