LOADING...
அமெரிக்காவில் H-1B விசா மோசடி வேட்டை: முன்னணி IT நிறுவனம் பெயர் அடிபடுவதால் இந்திய ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி
விசா முறைகேடுகள் குறித்து, டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தனது முதல் விசாரணையைத் தொடங்கியுள்ளது

அமெரிக்காவில் H-1B விசா மோசடி வேட்டை: முன்னணி IT நிறுவனம் பெயர் அடிபடுவதால் இந்திய ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி

எழுதியவர் Venkatalakshmi V
Jul 09, 2026
07:59 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான H-1B விசா மற்றும் PERM திட்டங்களில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து, டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தனது முதல் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த விசா வேட்டை குறித்துப் பேசிய உயர் அதிகாரி ஒருவர், உலகின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான Cognizant பெயரை நேரடியாகக் குறிப்பிட்டுள்ளதால், அமெரிக்காவில் உள்ள இந்திய ஐடி ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கத் தொழிலாளர் துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் இதுகுறித்துக் கூறுகையில், வெளிநாட்டுத் தொழிலாளர் விசா முறைகேடுகளைத் தடுப்பதற்காக டிரம்ப் அரசு எடுத்துள்ள மிக ஆக்ரோஷமான நடவடிக்கை இது என்றும், இந்த விசாரணையின் முதற்கட்டமாக ஏற்கனவே பல டஜன் கணக்கான நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

விசா மோசடி

விசா மோசடி பட்டியலில் 'காக்னிசண்ட்' நிறுவனமா?

அமெரிக்காவின் ஃபாக்ஸ் பிசினஸ் ஊடகத்திற்கு பேட்டியளித்த இன்ஸ்பெக்டர் ஜெனரல்,"விசா முறைகேடு தொடர்பாக எங்களுக்கு கிடைத்துள்ள ரகசியத் தகவல்களின் அடிப்படையில், உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் சிலவற்றைப் பற்றி விசாரித்து வருகிறோம். குறிப்பாக, காக்னிசண்ட் போன்ற பெரிய நிறுவனங்களின் H-1B மற்றும் நிரந்தரக் குடியுரிமை(PERM) ஸ்பான்சர்ஷிப்கள் குறித்து விசில்புளோயர்கள் எங்களிடம் தகவல்களைப் பகிர்ந்துள்ளனர். சிறப்பு மோசடித் தடுப்புப் படையுடன் இணைந்து, இந்த விவகாரத்தில் உள்ள அனைத்து உண்மைகளையும் நாங்கள் வெளியே கொண்டு வருவோம்" என்று கூறினார். காக்னிசண்ட் நிறுவனம் மீது தற்போது வரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளோ அல்லது சட்டரீதியான வழக்குகளோ இன்னும் பதிவு செய்யப்படவில்லை. விசில்புளோயர்களிடம் இருந்து வந்த தகவல்களின் அடிப்படையில் மட்டுமே விசாரணை வட்டத்திற்குள் அந்த நிறுவனத்தின் பெயர் விவாதிக்கப்பட்டுள்ளது.

ஐடி துறை

இந்திய ஐடி துறைக்கு ஏன் இந்த பதற்றம்?

அமெரிக்காவில் வழங்கப்படும் மொத்த H-1B விசாக்களில் தொழில்நுட்பத் துறை மட்டுமே 60% முதல் 70% வரை பயன்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக, அமெரிக்க அரசின் 2024 ஆம் ஆண்டு தரவுகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட H-1B விசா பயனாளர்களில் 71 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்கள் ஆவர். இந்தியாவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர்கள், டெவலப்பர்கள், ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் பணிபுரிய இந்த விசா ஒரு முக்கிய நுழைவாயிலாக உள்ளது. இதனால், டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அதிரடி விசா வேட்டை மற்றும் காக்னிசண்ட் போன்ற ஐடி நிறுவனங்கள் மீதான விசாரணை, வரும் நாட்களில் இந்திய ஐடி சந்தையிலும், அமெரிக்கா செல்ல விரும்பும் ஊழியர்கள் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement