LOADING...
டெல்லியில் காங்கிரஸ், பாஜக தலைமை அலுவலகங்களுக்கு வாடகை பாக்கி; 13 ஆண்டுகளாக இலவசமாகப் பயன்படுத்தப்படுகிறதா காங்கிரஸ் தலைமையகம்?
டெல்லியில் காங்கிரஸ், பாஜக தலைமை அலுவலகங்களுக்கு வாடகை பாக்கி

டெல்லியில் காங்கிரஸ், பாஜக தலைமை அலுவலகங்களுக்கு வாடகை பாக்கி; 13 ஆண்டுகளாக இலவசமாகப் பயன்படுத்தப்படுகிறதா காங்கிரஸ் தலைமையகம்?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 09, 2026
10:47 am

செய்தி முன்னோட்டம்

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைமையகமான 24, அக்பர் ரோடு பங்களா, கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக "அனுமதியின்றி ஆக்கிரமிப்பு" செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்காக மத்திய அரசுக்கு எந்தவொரு வாடகையும் செலுத்தப்படவில்லை என்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தெரியவந்துள்ளது. அதே வேளையில், ஆளும் பாஜக-வின் முன்னாள் தலைமையகத்தின் வாடகை பாக்கியும் தற்போது மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எஸ்டேட் இயக்குநரகம் அளித்துள்ள இந்தத் தகவல், டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

குற்றச்சாட்டு

2013 முதல் வாடகை வரவில்லை: காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு

சொகுசு பங்களாவான 24, அக்பர் ரோடு, கடந்த 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று காங்கிரஸ் கட்சிக்கு அலுவலகப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக கட்டுமானத்தை காரணம் காட்டி, இந்த பங்களாவுக்கான ஒதுக்கீட்டை கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் 26 முதல் மத்திய அரசு ரத்து செய்தது. ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட போதிலும், காங்கிரஸ் பங்களாவைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. 2013 ஜூன் 26 முதல் இன்று வரை இந்த பங்களாவிற்கு எந்தவொரு வாடகையும் அரசுக்கு வரவில்லை என்று இயக்குநரகம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி அரசுக்கு செலுத்த வேண்டிய மொத்த பாக்கித் தொகை எவ்வளவு என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், அது "மறுபரிசீலனையில்" உள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாஜக

பாஜக-வின் முன்னாள் அலுவலக நிலவரம் என்ன?

இதே RTI மனுவில், டெல்லியின் அசோகா ரோடில் அமைந்திருந்த பாரதிய ஜனதா கட்சியின்(BJP) முன்னாள் தலைமையகம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த பங்களா கடந்த 1985ஆம் ஆண்டு மார்ச் 21 அன்று பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, இந்தத் சொத்து மக்களவை உறுப்பினர்களின் பயன்பாட்டுப் பட்டியலுக்குள் மாற்றப்பட்டுள்ளது. எனவே, இதன் வாடகை வசூல் மற்றும் தற்போதைய நிலவரம் குறித்த கேள்விகள் மக்களவைச் செயலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த பங்களா தொடர்பாக பாஜக அரசுக்கு ஏதேனும் வாடகை பாக்கி வைத்துள்ளதா என்பதும் இன்னும் இறுதி செய்யப்படாமல், மத்திய அரசின் ஆய்வில் உள்ளதாக RTI பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த இரு பங்களாக்களுக்கும் மாத உரிமக் கட்டணமாக தலா ₹3,920 நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement