வோட்டர் லிஸ்டில் உங்க பேரு இருக்கா? தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) பிந்தைய இறுதி வாக்காளர் பட்டியல் இன்று, திங்கள்கிழமை வெளியாகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாவட்ட வாரியாக தகுதியுள்ள வாக்காளர்களின் முழு விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளார். வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 97,37,831 வாக்காளர்கள் பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டனர். இதன் விளைவாக, மாநிலத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 5.43 கோடியாகக் குறைந்திருந்தது. நீக்கப்பட்டவர்களில் இறந்தவர்கள் போக, எஞ்சியிருந்த 66 லட்சம் பேரில் தகுதியானவர்கள் மீண்டும் இணையவும், புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
விவரங்கள்
வாக்காளர்கள் தங்கள் பெயர் இருக்கிறதா என்பதை எங்கு சரிபார்க்கலாம்?
முரண்பட்ட தகவல்கள் காரணமாகப் பெயர் நீக்கப்பட்ட 12 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி, பெயர் நீக்கத்திற்கான காரணங்கள் கிராம ஊராட்சி அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் வெளியிடப்பட்டன. பாதிக்கப்பட்டவர்கள் விளக்கம் அளிக்கவும், உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கவும் வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், இன்று இறுதிப் பட்டியல் வெளியாகிறது. வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதைத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்கள் அல்லது வாக்குச் சாவடிகளில் சரிபார்த்துக் கொள்ளலாம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கப் போகும் மொத்தத் தகுதியான வாக்காளர்கள் எத்தனை பேர் என்பது இன்று மாலைக்குள் முழுமையாகத் தெரியவரும்.