தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறையா? மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும்
புயல் பாதிப்பால் நாளை(டிசம்பர் 4) தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து, இன்று மாலைக்குள் முடிவெடுக்கப்படும் என, தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜாம்' புயல் நாளை, வட தமிழக கரையோர மாவட்டங்களை வந்தடையும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்தவர், நாளை புயல் பாதிப்பால் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுமா என்ற கேள்விக்கு, இன்று மாலைக்குள் முதல்வர் அறிவிப்பார் என தெரிவித்தார். மேலும், தனியார் நிறுவனங்கள் அவர்களது ஊழியர்களின் நலன் கருதி முடிவெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் ஆய்வு
புயலால் 118 ரயில்கள் ரத்து
புயல் எச்சரிக்கையை முன்னிட்டு, இன்று ஏழு மாவட்டங்களில் மிக கனமழையும், ஒன்பது மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை உட்பட எட்டு மாவட்டங்களில் மிக கனமழையும், இரண்டு மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 4,967 இதர நிவாரண முகாம்களும் அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கை வழங்கி, அவர்கள் கரை திரும்புவதை அரசு உறுதி செய்து வருகிறது. புயலால், 118 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தயார் நிலையில் மீட்பு வீரர்கள்
தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 350 வீரர்களை கொண்ட 14 குழுக்கள் மற்றும் தேசிய மீட்பு படையின் 225 வீரர்களை கொண்ட 9 குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள, சென்னை உட்பட 8 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். மாநில மற்றும் மாவட்ட அளவிலான அவசர செயல்பாட்டு மையங்கள், 24 மணி நேரமும் கூடுதல் அலுவலர்களுடன் இயங்குகின்றன. சென்னையில், 348 பேர் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் 162 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.