Loading...
தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் வெதர்மேன் தகவல்
5 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் வெதர்மேன் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 05, 2026
05:56 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வளிமண்டலச் சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் பகுதிகளில் இருந்து வடக்கு உள் கர்நாடகா வரை, தமிழகம் வழியாக நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பாதை காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மற்ற மாவட்டங்கள்

சென்னை மற்றும் புறநகர் பகுதி வானிலை நிலவரம்

திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாலை அல்லது இரவு வேளைகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பதிவில்,"சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு (KTCC) மாவட்டங்களுக்கு மழைக்கான நேரம் விரைவில் வரும். அப்படி வரும்போது அது 'தரமான சம்பவமாக' இருக்கும்! தற்போது தென் மற்றும் மேற்கு உள் மாவட்டங்கள் மழையை அனுபவித்து வருகின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT