தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தெற்கு கடலோர கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் தெற்கு உள் கர்நாடகா வரை பரவியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். மேலும் நாளை, கோவை, நெல்லை, நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் அக்டோபர் 10 ஆம் தேதியும் கோவை மலைப் பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை
மற்ற மாவட்டங்களில் மிதமான மழை மற்றும் வெப்பநிலை நிலவரம்
டெல்டா மாவட்டங்கள், திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றமிருக்காது எனினும், ஓரிரு இடங்களில் வெப்பநிலை சற்று உயர வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு அல்லது அதிகாலை நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.