முதல்வர் விஜய்க்கு கிடைக்கும் மாத சம்பளம் மற்றும் அரசு சலுகைகள் இவ்வளவுதானா?
செய்தி முன்னோட்டம்
திரையுலகில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்து, பல கோடி ரூபாய் சம்பளத்தை விடுத்து மக்கள் சேவைக்காக 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில்தவெக 108 இடங்களில் வென்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்துள்ள சூழலில், தமிழக முதல்வருக்குக் கிடைக்கும் அரசு சலுகைகள் மற்றும் சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. சினிமாவில் ஒரு படத்திற்கு ரூ. 150 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வந்த விஜய்க்கு, தற்போது மாதச் சம்பளமாக ரூ. 2 லட்சத்து 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் சம்பள விகிதங்களின்படி இந்த ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதர சலுகைகள்
அரசு பங்களா, சொகுசு வாகனங்கள் உள்ளிட்ட இதர சலுகைகள்
முதலமைச்சர் விஜய்க்குசென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அரசு பங்களா அதிகாரப்பூர்வ குடியிருப்பதாகக் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது பாதுகாப்பிற்காக குண்டு துளைக்காத 3 சொகுசு கார்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களுக்கான எரிபொருள் படியாக (Fuel Allowance) மாதம் ரூ. 1 லட்சம் அரசுத் தரப்பில் இருந்து ஒதுக்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் என்ற ரீதியில் விஜய்க்கு உயரிய Z+ பிரிவு பாதுகாப்பு கான்வாய் வாகனங்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் மற்றும் கமாண்டோ பாதுகாப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உயர்தர மருத்துவக் காப்பீடு. அதிகாரப்பூர்வ மற்றும் அவசரத் தேவைகளுக்கான ஹெலிகாப்டர் வசதி. அரசு முறை பயணங்களின் போது பயணச் செலவுகளை அரசே ஏற்கும். முதலமைச்சரின் பணியாளர்களின் மாத ஊதியத்தை அரசாங்கமே வழங்கும்.
எம்.எல்.ஏ
தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளப் பின்னணி
மறுபுறம், தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்களின் (MLA) ஊதியம் பல்வேறு காலகட்டங்களில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ. 55 ஆயிரத்தில் இருந்து ரூ. 1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் கொண்டுவரப்பட்ட விதிமுறை திருத்தங்களின்படி, முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் அடிப்படைச் சம்பளம் ரூ. 30 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு, அதனுடன் இதர படிகள் சேர்க்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.