
புடினுடன் பிரதமர் மோடி பேசியதையடுத்து இந்தியர்களை ராணுவத்தில் இருந்து வெளியேற்ற ரஷ்யா முடிவு
செய்தி முன்னோட்டம்
பிரதமர் மோடி தனது மாஸ்கோ பயணத்தின் போது ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் பிரச்சினையை எழுப்பியதை அடுத்து, ரஷ்ய இராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் வெளியேற்ற ரஷ்யா முடிவு செய்துள்ளதாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் இதுவரை குறைந்தது இரண்டு இந்தியர்கள் இறந்துள்ளனர்.
அதே நேரத்தில் போர் மண்டலத்தில் சிக்கிய டஜன் கணக்கான இந்தியர்கள் தாங்கள் ரஷ்யா ராணுவத்தில் ஏமாற்றி சேர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாள் பயணமாக மாஸ்கோ சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று மாலை அதிபர் விளாடிமிர் புடின் நடத்திய தனிப்பட்ட விருந்தில் இந்த விவகாரத்தை எழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேச்சுவார்த்தை
நேற்று இரவு ரஷ்யா அதிபருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை
நேற்று இரவு நடைபெற்ற அந்த பேச்சுவார்த்தையின் இறுதியில் தங்கள் ராணுவத்தில் பணிபுரியும் அனைத்து இந்தியர்களையும் வெளியேற்றவும், அவர்கள் திரும்புவதற்கு வசதி செய்யவும் ரஷ்யா ஒப்புக்கொண்டது.
இரவு உணவு சந்திப்பில், மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடிக்கு புடின் வாழ்த்து தெரிவித்ததோடு, இந்திய பொருளாதாரத்தின் உயரும் நிலை குறித்தும் பேசினார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
ஏறக்குறைய இரண்டு டஜன் இந்தியர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு, இது பற்றி ரஷ்ய அதிகாரிகளிடம் பேசியதாகவும் கூறப்பட்டது.
மறுபுறம், இந்திய புலனாய்வு அமைப்புகளும் சோதனை நடத்தி இந்தியர்களை ரஷ்யாவிற்கு கடத்தும் கும்பலை முறியடித்துள்ளன.