புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு மாநிலத்தில் மிக்ஜாம் புயலின் தாக்கம் வட கடலோர மாவட்டங்களில் தான் அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னமும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மீட்டெடுக்கப்படவில்லை. பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள காரணத்தினால், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மரங்கள் சாய்ந்து சாலைகளில் விழுந்துள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து 5 நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இப்பகுதிகளில் பள்ளிகள் வரும் 11ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீர்செய்யும் பணிகள் குறித்த சுற்றறிக்கையை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை
இந்நிலையில், மேற்கூறிய 4 மாவட்டங்களில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுவதற்கு முன்னர் அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர்செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கட்டிட இடிபாடுகளை முழுமையாக அகற்ற வேண்டும், பள்ளி வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட வேண்டும், மின் இணைப்புகளில் ஏதேனும் பாதிப்புகள் அல்லது கசிவுகள் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் உள்ளிட்ட பல முன்னேற்பாடுகள் குறித்த விவரங்கள் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அரசு பள்ளிகளில் சீரமைக்கும் பணிகள், மரங்களை அகற்றும் பணிகள் உள்ளிட்ட சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.