
மும்பையில் வரலாறு காணாத மழை: 8 மணிநேரத்தில் 177 மிமீ, 100 ஆண்டு சாதனை முறியடிப்பு
செய்தி முன்னோட்டம்
மும்பை மாநகரத்தில் கடந்த 8 மணி நேரத்தில் 177 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 100 ஆண்டுகளில் பதிவான மழை அளவுகளை விட அதிகமாக இருப்பதால், இதுவரையிலான சாதனையை முறியடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் கடந்த மூன்று நாட்களாக கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மும்பையில் இரவு, பகல் என இடைவிடாது பெய்யும் மழை காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ள பாதிப்பால் ரயில், விமான சேவைகளும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பிற்காக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை பல்கலைக்கழகம் தனது தேர்வுகளை ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு மாற்றியுள்ளது.
வெள்ளம்
வெள்ளத்தில் மூழ்கிய மும்பை நகரம்
தொடர் மழையால் மும்பை நகரின் முக்கிய வீதிகள் மற்றும் மேம்பாலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாதர், கிங் சர்க்கிள் பகுதிகளில் வாகன ஓட்டிகள் நீரில் சிக்கிய நிலையில் காணப்பட்டனர். அந்தேரி சுரங்கப்பாதை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. வரலாறு காணாத இந்த கனமழையைக் கருத்தில் கொண்டு, மும்பை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ராய்காட், ரத்னகிரி, சத்தாரா, கோல்ஹாபுர், புனே உள்ளிட்ட பகுதிகளும் அதேபோல் கடும் எச்சரிக்கையில் உள்ளன. பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.