சென்னைக்கு ஏன் மறுபடியும் ரெட் அலர்ட்? மழை பெய்யுமா?:வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்
வங்கக் கடலில் உருவாகி இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு நோக்கி நகரத்தொடங்கி விட்டது. இதன் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவாட்டார பகுதிகளுக்கு கனமழை அச்சுறுத்தல் இல்லை என தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர். எனினும் சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னைக்கு மீண்டும் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. இது எதற்காக என அனைவரும் குழம்பிய நிலையில், வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, இன்றிரவு மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவே வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Twitter Post
முன்னெச்சரிக்கையாக விடப்பட்ட அலெர்ட்: இயக்குனர்
வானிலை ஆய்வு மைய தெற்கு மண்டல இயக்குநர் பாலச்சந்திரன்,"ரெட் அலர்ட் ஏன் கொடுத்துள்ளோம் என்றால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் கடலில் இருக்கிறது. நாளை காலை கரைக்கு அருகில் வரும்போது மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதைக் கருத்தில்கொண்டு ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதன் காரணமாக ரெட் அலர்ட் கொடுத்துள்ளோம். இது முன்னெச்சரிக்கையாக விடப்பட்ட அலெர்ட்" என தெரிவித்துள்ளார். மேலும் அவர்,"அடுத்த 4 தினங்களுக்கு தமிழ்நாடு, புதுவை காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது" எனத்தெரிவித்தார்.