ரஜோரி மோதல்- வெடிகுண்டு நிபுணர் உட்பட இரண்டு தீவிரவாதிகள் கொலை, 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்
பாகிஸ்தானைச் சேர்ந்த பயிற்சி பெற்ற வெடிகுண்டு வல்லுநர் உள்ளிட்ட இரண்டு தீவிரவாதிகள், ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில், பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் கொல்லப்பட்டனர். இந்த மோதலில், ஐந்து இந்திய ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். குவாரி என அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளில் பயிற்சி பெற்றவர். அவர், லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய பயங்கரவாதத் தலைவராகக் கருதப்படுகிறார், மேலும் கடந்த ஒரு வருடமாக ரஜோரி-பூஞ்சில் தனது குழுவுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். இவர், டாங்கிரி மற்றும் கண்டி தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவராக நம்பப்படுகிறது. இப்பகுதியில் தீவிரவாதத்தை மீட்டெடுக்க இவர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது,
இரண்டு நாட்களாக தொடர்ந்த தீவிரவாதிகளுடனான மோதல்
இந்த வருட ஜனவரி மாதத்தில் ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள டாங்ரி பகுதியில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். மே மாதத்தில், கண்டி கிராமத்தில் உள்ள கேசரி பகுதியில், தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில், ஐந்து வீரர்கள் உயிரிழந்தனர். சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி குவாரி, IED(வெடிகுண்டு) நிபுணத்துவம் பெற்றவர், குகைகளில் இருந்து ஒளிந்துகொண்டு தாக்குதலில் ஈடுபடும் இவர், பயிற்சி பெற்ற துப்பாக்கி சுடும் வீரரும் ஆவார். பாதுகாப்பு படையினர்- தீவிரவாதிகளுக்கு இடையே நேற்றும், இன்றும் நடந்த மோதலில், 5 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இரண்டு ராணுவ கேப்டன்கள் உட்பட நான்கு பேர் நேற்று உயிரிழந்த நிலையில், இன்று ஒருவர் காலமானார்.