
இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்
செய்தி முன்னோட்டம்
'ஆபரேஷன் சிந்தூர்' மூலமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததற்குப் பிறகு, இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையை மே 7ஆம் தேதி தொடங்கியது.
இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள், 3 விமானப்படை தளங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அழிக்கப்பட்டன.
பின்னர், பாகிஸ்தான் ஏவுகணைகள், ட்ரோன்கள், போர் விமானங்கள் மூலமாக பதிலடி கொடுக்க முயன்ற போதும், இந்திய மூப்படைகளால் இவை அனைத்தும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன.
முக்கியத்துவம்
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டம்
இந்தியாவின் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாகிஸ்தான், இந்தியாவிடம் போர்நிறுத்தம் கோரியது. இந்தியாவும் அதனை ஏற்று தற்போது இருநாடுகளும் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளன.
இந்த நிலையில் இன்று நடைபெறும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், 'ஆபரேஷன் சிந்தூர்' வெற்றியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள், பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வழிமுறைகள், மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான முடிவான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும், பாகிஸ்தானின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் அழுத்தம் ஏற்படுத்தும் திட்டங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.