கனமழை எதிரொலி: நெல்லை, தென்காசி, குமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. வரும் அக்டோபர் 26-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
கனமழை
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலான பலத்த காற்றுடன் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
திருச்சிராப்பள்ளி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர், கரூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மாநிலத்தின் பிற பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.