நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிடின் விடுதலை மனுவை மீண்டும் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு
1996 ஆம் ஆண்டில், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ப.க. பொன்னுசாமியின் மகனான நாவரசு, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்கும்போது கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில், அதே கல்லூரியில் படித்து வந்த சீனியர் மாணவர் ஜான் டேவிட் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடலூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் ஜான் டேவிடுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் 2001ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் இதனை ரத்து செய்தது. 2011 ஆம் ஆண்டில் தமிழக அரசின் மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை தீர்ப்பை உறுதி செய்தது.
சிறையில் இருந்து விடுவிக்க கோரிக்கை மனு
தற்போது 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஜான் டேவிடை முன்கூட்டியே விடுவிக்க கோரிய மனுவை அவரது தாயார் எஸ்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சென்னை உயர்நீதிமன்றம், மாநில அளவிலான குழு வழங்கிய பரிந்துரை தொடர்பான விவரம் அடிப்படையில், ஜான் டேவிடை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என ஆளுநர் மறுத்திருந்தார். இந்த நிலையில் ஜான் டேவிட்டின் தாயாரின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மாநில அரசு வழங்கிய பரிசீலனை மனுவை மீண்டும் பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதோடு, ஜான் டேவிடுக்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி அமர்வு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.