LOADING...
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு: ஒரு டாலர் 92.36 ரூபாயாக வீழ்ச்சி; என்ன காரணம்?
இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு: ஒரு டாலர் 92.36 ரூபாயாக வீழ்ச்சி; என்ன காரணம்?

எழுதியவர் Sekar Chinnappan
Mar 12, 2026
11:24 am

செய்தி முன்னோட்டம்

சர்வதேச சந்தையில் நிலவும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை (மார்ச் 12) அன்று வரலாறு காணாத வகையில் ரூ.92.36 என்ற நிலைக்குச் சரிந்தது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதும், கச்சா எண்ணெய் விலை உயர்வுமே இந்த வீழ்ச்சிக்கு முதன்மையான காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. ரூபாய் வீழ்ச்சிக்கு 3 முக்கிய காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவை பின்வருமாறு:- ஈராக் கடல் பகுதியில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. இந்தியா தனது எண்ணெய் தேவையில் 80 சதவீதத்திற்கும் மேலாக இறக்குமதி செய்வதால், எண்ணெய் விலை உயர்வு டாலருக்கான தேவையை அதிகரித்து ரூபாயின் மதிப்பைக் குறைக்கிறது.

காரணங்கள்

ரூபாய் வீழ்ச்சிக்கான காரணங்கள்

உலகளாவிய போர்ச் சூழலால் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் அமெரிக்க டாலர் மீது முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் மற்ற நாட்டு நாணயங்களுக்கு நிகரான டாலரின் மதிப்பு வலுவடைந்து, இந்திய ரூபாய் போன்ற வளரும் நாட்டு நாணயங்கள் அழுத்தத்திற்கு உள்ளாகின்றன. இந்தியப் பங்குச் சந்தைகளில் இருந்து அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்களது முதலீடுகளைத் திரும்பப் பெற்று வருகின்றனர். அவர்கள் பங்குகளை விற்றுவிட்டு ரூபாயை டாலராக மாற்றுவதால், டாலருக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு ரூபாய் மதிப்பு மேலும் சரிகிறது.

பாதிப்புகள்

இதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பலன்கள்

கச்சா எண்ணெய் இறக்குமதி விலை உயர்வதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கலாம். இது அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும். மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் செல்போன்களின் விலை உயர வாய்ப்புள்ளது. ஐடி மற்றும் மருந்து உற்பத்தி போன்ற ஏற்றுமதி சார்ந்த துறைகளுக்கு இது சாதகமாக அமையலாம். வெளிநாடுகளில் இருந்து அவர்கள் பெறும் வருவாய், இந்திய ரூபாயாக மாற்றப்படும் போது கூடுதல் லாபத்தைத் தரும்.

Advertisement