ரீல்ஸில் நகைகளைக்காட்டி சிக்கிய நாகர்கோவில் யூடியூபர்; 118 சவரன் கொள்ளையடித்த 3 பேர் கைது
செய்தி முன்னோட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துகோணத்தில் வசித்து வரும் பிரபல யூடியூபர் மதுமிதா என்பவரது வீட்டில் புகுந்து, 118 சவரன் நகைகளைக் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டி உட்பட 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். சிவகாசியை சேர்ந்த ஏலக்காய் வியாபாரி வினோத்குமாரின் மனைவியான மதுமிதா, இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் தனக்கு சொந்தமான விலையுயர்ந்த ஆடைகள், நகைகள் மற்றும் கட்டிலில் கட்டுக்கட்டாக பணத்தை போட்டு வீடியோக்கள் வெளியிட்டு வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 24 அன்று குழந்தைக்கு துணி வாங்க குடும்பத்துடன் வெளியே சென்ற நேரத்தை பயன்படுத்தி, கேஸ் கட்டிங் மெஷின் மூலம் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த 118 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
தனிப்படை
சிசிடிவி காட்சிகள் & 5 தனிப்படைகளின் விசாரணை
இந்த சம்பவத்தைக் கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட 5 தனிப்படை போலீஸார், அப்பகுதியில் இருந்த 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் ஹெல்மெட் மற்றும் முகக்கவசம் அணிந்து டெலிவரி பையுடன் பைக்கில் சென்ற நபா்களை அடையாளம் கண்டனர்.
இதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இசக்கி பாண்டி (30) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, மதுமிதாவின் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை பார்த்தே இக்கொள்ளையில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.
எச்சரிக்கை
பொதுமக்களுக்கு காவல் துறையின் எச்சரிக்கை
மத்திய பிரதேசத்தை சேர்ந்த யூடியூபர் ரச்னா குர்ஜார் வீட்டிலும் இதேபோன்று நகைகளைக் காட்டி ரீல்ஸ் போட்டதால் ₹8 லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள காவல் துறையினர், பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள பணம் மற்றும் நகைகளை சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கடுமையாக எச்சரித்துள்ளனர்.