மோர்பி பால விபத்து - ஓராண்டு ஆகியும் நீதி கிடைக்கவில்லை என்று குமுறல்
செய்தி முன்னோட்டம்
கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி 2022ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தின் மச்சு ஆற்றின் மீதிருந்த மும்பை மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 50 குழந்தைகள் உள்பட 135 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விபத்து நேர்ந்த இந்த மோர்பி பாலமானது நூற்றாண்டு பழமையானது.
இப்பாலம் மிகவும் சேதமடைந்திருந்த காரணத்தினால் அதிகாரிகள் இந்த பாலத்தை மறு சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு கடந்தாண்டு திறந்து வைத்துள்ளனர்.
அதன் பின்னர் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம் கூடியதால் அந்த பாலம் அறுந்து விழுந்தது.
பாலம்
மோர்பி தொங்கு பாலத்தின் வரலாறு
பிரிட்டிஷ் ஆட்சியின் போது, 19ம் நூற்றாண்டில் மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட இந்த தொங்குப்பாலம் 230 மீட்டர் அளவில் கட்டப்பட்டுள்ளது.
மோர்பி மன்னன் சர் வாஜி தாகூர் இப்பாலத்தினை நவீன முறையில் ஐரோப்பிய தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி கட்டியுள்ளார்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பாலத்தினை அவர் கட்டியுள்ளார். அந்த காலகட்டத்தில் இந்த பாலம் கலை மற்றும் தொழில்நுட்பம் கொண்ட அதிசயமாகவே பார்க்கப்பட்டது என்று வரலாறு கூறுகிறது.
1879ம் ஆண்டு பிப்ரவரி 20ல் மும்பையின் அப்போதைய கவர்னர் ரிச்சர்டு டெம்பிள் இந்த பாலத்தினை திறந்து வைத்தார் என்று கூறப்படுகிறது.
சபா
விபத்துக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தல்
இக்கோர விபத்து ஏற்பட்டு ஓராண்டு நிறைவுபெற்றதையடுத்து, அகமதாபாத் சபர்மதி ஆசிரமம் எதிரே இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உறவினர்கள் பலர் ஒன்றுகூடி சுமார் 3-மணிநேரம் அமர்ந்து உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் விபத்துக்கு காரணமானவர்களை அரசு தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி நீதி கோரியதாக செய்திகள் தெரிவிக்கிறது.
இந்நிகழ்வானது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சங்கம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இச்சங்கத்தின் தலைவரான நரேந்திர பர்மர் இதுகுறித்து பேசுகையில், முதலில் சபர்மதி ஆசிரமத்திலிருந்து காந்திநகரில் அமைந்துள்ள முதல்வர் இல்லம் வரை 'ஷ்ரத்தாஞ்சலி யாத்திரை'நடத்துவதாக இருந்ததாகவும்,
அதற்கு மாநில அரசு அனுமதி வழங்காததால் 'ஷ்ரத்தாஞ்சலி சபா' கூட்டம் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.
இக்கூட்டத்தின் மூலம், விபத்துக்கு காரணமானவர்களுக்கு விரைவில் கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
கைது
விசாரணையில் அலட்சியம் காட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தல்
இந்த வழக்கு சம்மந்தமானவர்களுள் சிலர் கைது செய்யப்பட்ட பின்னர் இதன் விசாரணையில் அலட்சியம் காட்டியதாக எஸ்.ஐ.டி.அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தோரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போது தான் இதுபோன்ற சம்பவங்களில் அலட்சியம் காட்டுபவர்களுக்கு பயம் ஏற்படும் என்று கூறும் நரேந்திர பர்மர், இந்த விபத்தில் தனது 10 வயது மகளை பறிகொடுத்தவர் என்பது குறிப்பிடவேண்டியவை.
மேலும் தனது கணவனை இழந்து வாழ்ந்து வந்த நிலையில் இந்த விபத்தில் தன்னுடைய 19 வயது மகனையும் இழந்த ஷபானா பதான் பேசுகையில், '14க்கு மேற்பட்ட வீடுகளில் வீட்டு வேலை செய்து வளர்த்து வந்த எனது மகன் தற்போது என்னுடன் இல்லை. இதற்கு எவ்வளவு இழப்பீடு தொகை கொடுத்தாலும் அது ஈடாகாது' என்று கதறியுள்ளார்.
குமுறல்
பழுது பார்த்த நிறுவன இயக்குனர் மற்றும் மேலாளர் கைது
ஒரு கொலை செய்தவருக்கே தூக்குத்தண்டனை வழங்கப்படும் பொழுது 135 பேர் உயிரிழந்த விபத்திற்கு காரணமானவர்கள் ஏன் இன்னும் தண்டிக்கப்படவில்லை?
ஓராண்டு ஆகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏன் நீதி கிடைக்கவில்லை? என்றும் அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், 'ஒன்று இந்த வழக்கின் வழக்கறிஞர் மாற்றப்பட வேண்டும். இல்லையேல் நீதிபதி மாற்றப்பட வேண்டும்' என்றும்,
'இதற்கு நீதி கிடைக்கும் வரை நான் வெறுங்காலுடனே இருப்பேன், காலணிகள் அணிய மாட்டேன்' என்று சபதமிட்டுள்ளார்.
இதற்கிடையே முன்னதாக இந்த விபத்து குறித்து விசாரிக்க அம்மாநில அரசு நியமித்த குழு, பழுது பார்த்த நிறுவனத்தின் பராமரிப்பு பணிகளில் குறைபாடுகள் இருந்ததாக கூறப்பட்டது.
அதன்பேரில் அந்நிறுவனத்தின் இயக்குனர், மேலாளர், பணியாளர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.