Loading...
தொகுதி மறுவரையறை மசோதா விவகாரம்: திமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசத்திற்கே இடமில்லை
" திமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசத்திற்கே இடமில்லை": மு.க.ஸ்டாலின்

தொகுதி மறுவரையறை மசோதா விவகாரம்: திமுகவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசத்திற்கே இடமில்லை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 27, 2026
02:56 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்கப் போவதாக வெளியான ஊகங்களை முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இன்று இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும், தமிழகத்தின் நலனில் சமரசம் செய்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். தொகுதி மறுவரையறை பின்னணியில் பாஜகவுடன் திமுக கைகோர்க்கத் தயாராகி வருவதாக ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஸ்டாலினின் இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.

நிபந்தனைகள்

திமுக வலியுறுத்தும் இரண்டு முக்கிய நிபந்தனைகள்

வரும் நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்றச் சிறப்பு அமர்வில், 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டுடன் இணைக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு மீண்டும் தாக்கல் செய்யவுள்ளது.

இது குறித்துக் குறிப்பிட்டுள்ள மு.க. ஸ்டாலின், தொகுதி மறுவரையறையின் ஆபத்துகளுக்கு எதிராக இந்தியாவிலேயே முதன்முதலில் குரல் கொடுத்த கட்சி திமுகதான் என்றும், நியாயமான தொகுதி மறுவரையறையை வலியுறுத்தி நாடு முழுவதுமுள்ள அரசியல் தலைவர்களை முதன்முதலில் சென்னையில் ஒன்றிணைத்ததும் திமுகதான் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மக்களவையில் மாநிலங்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாகத் திமுக முன்வைத்த இரண்டு முக்கிய நிபந்தனைகளில் இன்றும் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிபந்தனை

இரண்டு முக்கிய நிபந்தனைகள்

மொத்த நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும், மக்களவையில் தமிழகத்திற்கு உள்ள தற்போதைய 7.18 சதவீத பிரதிநிதித்துவம் எக்காரணம் கொண்டும் குறைக்கப்படக் கூடாது.

1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே தற்போதுள்ள நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாற்றப்படாமல் அப்படியே நீடிக்க வேண்டும்.

தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிக்கக்கூடும் என ஊடகங்களில் வெளியாகும் ஊகங்களையும், அரசியல் எதிரிகளின் விமர்சனங்களையும் சாடியுள்ள மு.க. ஸ்டாலின், "ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களோ அல்லது துரோகிகளின் புலம்பல்களோ எங்களது உறுதியை அசைத்துப் பார்க்க முடியாது. பதவிக்காகக் கொள்கைகளைக் கைவிட்டவர்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும்" என பதிலடி கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT

நாடாளுமன்றக் கணக்கு

தொகுதி மறுவரையறை மசோதாவும் நாடாளுமன்றக் கணக்குகளும்

2029 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில், மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 850 வரை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள், புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டால் தங்களது அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும் என அஞ்சுகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு (131-வது திருத்த) மசோதா, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது. தற்போது அனைத்து மாநிலங்களுக்கும் சீராக 50 சதவீத இடங்களை அதிகரிக்கும் புதிய திருத்தங்களுடன் மசோதாவைக் கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது.

ADVERTISEMENT