
மாதவிடாயை காரணமாக சொல்லி மாணவியை வாசலில் தேர்வு எழுத வைத்த கோவை தனியார் பள்ளி
செய்தி முன்னோட்டம்
கோயம்புத்தூர் செங்குட்டைப்பாளையத்தில் செயல்படும் சுவாமி சித்பவானந்தா என்ற தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5 ஆம் தேதி பூப்படைந்துள்ளார்.
இந்நிலையில், முழு ஆண்டு தேர்வு எழுத பள்ளிக்கு சென்ற மாணவியை தீட்டு என்று கூறி பள்ளி நிர்வாகம் வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
அதோடு மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமர்ந்து அறிவியல் தேர்வு எழுதும்படி கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் தாயார் எடுத்த வீடியோ இணையத்தில் பரவ, பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது.
நடவடிக்கை
பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை, அமைச்சர் எதிர்வினை
புகாரின் அடிப்படையில் சித்பவானந்தா பள்ளி முதல்வர் ஆனந்தி மற்றும் கண்காணிப்பாளர் சிவகாமி ஆகியோரிடம் பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை மேற்கொண்டார்.
அதோடு, மாவட்ட கல்வி அலுவலர் வடிவேல் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து பள்ளியில் முதல்வரை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம். இருப்போம்" என பதிவிட்டுள்ளார்.
embed
Twitter Post
#BREAKING | "அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம்" கோவை தனியார் பள்ளியில் பூப்பெய்திய மாணவியை வாசலில் அமர வைத்து தேர்வெழுத வைத்த விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் கருத்து.#SunNews | #Kovai | #PrivateSchool | @Anbil_Mahesh pic.twitter.com/1fJzK5Vkjo— Sun News (@sunnewstamil) April 10, 2025