வங்ககடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுநிலை; இரு தினங்களுக்கு தமிழகத்தில் கனமழை!
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது காற்றழுத்த தாழ்வுநிலையாக உருமாறியுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த தாழ்வுநிலை அடுத்த இரண்டு நாட்களில், அதாவது நவம்பர் 16ஆம் தேதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாழ்வுநிலை காரணமாக, தமிழகத்தின் பல பகுதிகளில், குறிப்பாக விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களிலும், அதோடு புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் எனவும், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் மற்ற இடங்களில் மிதமழையும் பெய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்குமெனவும், ஒரு சில இடங்களில் மிதமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.